Posts filed under ‘என்னைக் கவர்ந்தவை’
காங்கிரசை ஒழிப்பதற்காக ஜெயலலிதாவை ஆதரிப்பது நியாயமா? சீமானுக்கு கவிஞர் தாமரையின் பகிரங்கக் கடிதம்!
அன்புள்ள இயக்குனர் சீமான் அவர்களுக்கு, வணக்கம். ‘இனியவளே’ படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கேட்டு உங்களை நான் சந்தித்த அந்த நாட்களை நான் திரும்பிப் பார்க்கிறேன். நீங்களும் நானும் உங்கள் குழுவைச் சேர்ந்த நண்பர்களும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்போம். அந்தப் பேச்சில் பெரும்பான்மை தமிழைப் பற்றியதாக, தமிழினம் பற்றியதாக, தமிழீழம் பற்றியதாகவே இருக்கும்.
பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நானும் நீங்களும் நிற்கும் இடம் பற்றி யோசிக்கிறேன். திரைப்படத்துறை நம் தமிழ் உணர்வுகளை எந்த விதத்திலும் குறைந்து விடவில்லை. வெற்றியோ தோல்வியோ, புகழோ பெயரோ… எதனாலும் நம் போராட்ட உணர்வு மழுங்கிப் போய்விடவில்லை. அன்றும் இன்றும் நம்மை ஒருங்கிணைத்தது, இணைப்பது மொழி- இன உணர்வும் தமிழீழ வேட்கையும்தான்!
திரைக்கலைஞர்களாக இருந்து கொண்டே தமிழீழ மக்களைக் காப்பதற்காக மற்றவர்களோடு சேர்ந்து போராடினோம். ஆவேசமான பேச்சு, கைது, சிறை என்று நீங்கள் போனீர்கள். ஒரு கட்டத்தில் நேரடியாக அரசியலில் இறங்கி ‘நாம் தமிழர்’ கட்சியை நிறுவுனீர்கள். தெளிவான சில அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் இயங்கினாலும் நான் எந்தக் கட்சி அல்லது அமைப்பையும் சேர்ந்தவனில்லை. எப்போதும் இப்படி இருப்பதையே விரும்புகிறேன்.
ஆனால் உங்கள் முயற்சியும் அதில் நீங்கள் கண்டுவரும் வளர்ச்சியும் எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றன. மொழி- இனவுணர்வு படைத்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்று உங்கள் பின்னால் அணிவகுத்திருக்கிறார்கள். தமிழீழத் தேசியத் தலைவரிடம் நீங்கள் கொண்டுள்ள அன்பும் பொங்கு தமிழர்க்கு இன்னல் விழைந்தால் சங்காரம் நிசமென்று நீங்கள் முழங்குவதும் உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்கும் இளைஞர் வரிசையை மென்மேலும் நீளச் செய்யும் என்பது உறுதி!
என் அயல்நாட்டுச் சுற்றுப் பயணங்களின்போது உலகத் தமிழர்கள் உங்கள் பால் வைத்துள்ள நேசத்தை நேரில் அறிந்து வியந்தேன், மகிழ்ந்தேன். அத்துணைப் பேரும் உங்களைத் தங்கள் உறவாகவே மதிக்கிறார்கள். உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் ‘நம்பிக்கை நாயக’னாக நீங்கள் நிற்பது கண்டு வாழ்த்தி வரவேற்கிறேன்.
ஆனால், உங்கள் நலம் விரும்பிகள்… என்று சாதாரணமாகச் சொல்லமாட்டேன், உங்கள் உறவுகளை – நான் உட்பட- உரிமைச் சொந்தங்களை, அண்மையில் குழம்பித் திகைக்கச் செய்துள்ள ஒன்றை, உங்கள் முகத்திற்கு நேரே சொல்லப் பலரும் தயங்கிக் கொண்டிருக்கும் ஒரு செய்தியை- இந்த திறந்த மடல் வழியாக உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். எனக்கு அந்த உரிமை இருக்கிறது என்றே நம்புகிறேன்.
வரப்போகும் சட்டப் பேரவைத் தேர்தலில் ஜெயலலிதாவையும் அ.தி.மு.க வையும் ஆதரிக்கப் போவதாக நீங்கள் பேசியும் எழுதியும் வருவது எங்கள் நெஞ்சங்களில் ஆயிரம் இடிகளை ஒன்றாக இறக்கியுள்ளது.
நம் தமிழினத்தை அழித்து, மென்று, உமிழ்நீரால் ஊறவைத்த காங்கிரஸ் கட்சியைத் தமிழ்நாட்டில் இருந்து ஒழிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி. ஆனால் அதற்காக அ.தி.மு.க வை ஆதரிக்கவேண்டும் என்றால் எப்படி?
யார் இந்த ஜெயலலிதா?
‘போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என்ற, காலத்தால் அழிக்க முடியாத அரும்பெரும் பொன்மொழியை உதிர்த்தவர் அல்லவா? அதுதான் அவருடைய ‘உண்மையான உள்ள வெளிப்பாடு’!
தேசியத் தலைவரைப் பிடித்து இழுத்து வந்து தூக்கில்போட ஆசைப்பட்டவர், நோய்வாய்ப்பட்ட ஐயா ஆன்ரன் பாலசிங்கம் இந்தியாவில் சிகிச்சை எடுக்க முடியாமல் மூர்க்கமாகத் தடுத்து அவர் உயிருக்கு உலையானவர். வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட ஈழ ஆதரவுத் தலைவர்களைப் பொடாக் கொடுஞ்சிறையில் அடைத்தவர். இப்படியெல்லாம் கொடுமைகள் புரிந்ததற்கு இன்றுவரை ஒப்புக்குக்கூட வருந்தாதவர். இன்றளவும் ராஜபட்சே புரிந்த இனப்படுகொலையைக் கண்டித்து ஒரு வார்த்தை பேசாதவர்.
அந்தக் கொலைகாரனுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கும் இந்திய அரசைக் கண்டிக்காதவர், தமிழர்களின் வாக்கைப் பெறுவதற்காக ‘தமிழீழம் அமைத்துத் தருவேன்’ என்று முழங்கிவிட்டு, தமிழ் மக்கள் இவர் ‘சிலநாள் மட்டும் நடிக்க வந்த புது நாடகத்தை’ நம்பவில்லை என்றதும், உண்ணாவிரதக் களைப்பு நீங்க கொடாநாடு போய்விட்டவர் – இவரையா சீமான் நாங்கள் ஆதரிக்க வேண்டும் என்கிறீர்கள்? என்ன கொடுமை இது?
உங்கள் தர்க்கப்படி பார்த்தால் இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபட்சேவைத் தடுக்க ரணில் விக்ரமசிங்கேவை நம் அண்ணன் பிரபாகரன் ஆதரித்திருக்க வேண்டும், அப்படித்தானே? இதைத்தான் இந்து ராம் சொன்னார், நக்கீரன் பேட்டியில் ரணிலே சொன்னார், கலைஞரும் ஆமோதித்தார். அண்ணனுக்கு அருவருப்பாகத் தெரிந்த சந்தர்ப்பவாதம் உங்களுக்கு மட்டும் தேர்தல் வியூகமாகத் தெரிவது எப்படி இயக்குனரே?
உங்கள் நிலையை சுபாஷ் சந்திரபோசோடு ஒப்பிடுகிறீர்கள். அவர் பிரிட்டனை எதிர்க்க ஜப்பானியனை நாடியதாகக் கூறுகிறீர்கள். ஆம் உண்மைதான். ஆனால் ஜப்பான் பிரிட்டனின் எதிரிநாடு! பிரிட்டனை மெய்யாகவே எதிர்த்தது, போர் புரிந்தது. களத்தில் நின்றது. எனவே போஸ் ஜப்பானிய ‘இராணுவ’த்தின் உதவியை நாடினார். இங்கே ஜெ உண்மையிலேயே காங்கிரசை எதிர்க்கிறாரா? இந்த வகையிலும் கலைஞர் செய்வதைத்தானே ஜெவும் செய்கிறார்?
தீயை அணைக்க சாக்கடையை வீசலாம். பெற்ரோலை வீசலாமா?
கலைஞரின் இனத் துரோகத்தைத் தோலுரித்துக் காட்டும் நீங்கள் ஜெயின் இனத்துரோகத்தையும் உரிக்க வேண்டாமா? அதை மன்னிக்க முடியாது என்றால் இதையும் மன்னிக்க முடியாது அல்லவா?
‘ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலும் தமிழர் விரோதப் போக்கில் செயல்பட்டால் எதிர்த்து முழங்குவேன்’ என்று கூறியுள்ளீர்கள். அப்படியானால் அவர் இதுவரை தமிழர் விரோதப் போக்கில் செயல்படவில்லை என்கிறீர்களா? அல்லது ‘இனி தமிழர் விரோதப் போக்கில் செயல்படமாட்டேன்’ என்று உங்களிடம் தனியாக ஏதும் உறுதியளித்திருக்கிறாரா?..
கலைஞர் காங்கிரசோடு அப்பிக் கொண்டிருப்பவர், ஜெ அதைப் பிய்த்து எடுத்துத் தான் அப்பிக் கொள்ளத் துடிப்பவர். இவர்களுக்கிடையே எதில்தான் வேறுபாடு உள்ளது – ஒருவர் வேட்டி, மற்றவர் சேலை அணிவது தவிர?
ஒருவேளை கூட்டணியில் ‘திடீர்’ மாற்றம் ஏற்பட்டு காங்கிரசுடன் அதிமுக கூட்டணி சேர்ந்துவிட்டால் உங்கள் ‘வியூகம்’ என்னாகும்? அப்போது காங்கிரசை ஒழிப்பதற்காகக் கலைஞரை ஆதரிப்பீர்களா?
‘அதிமுக ஆட்சிக்கு வந்தர்லும் சீமான் இருக்குமிடம் சிறைதான்’ என்கிறீர்கள். சரி, தமிழீழ ஆதரவாளர்களை – வைகோ, நெடுமாறன், சீமான் யாராயினும் – ஒடுக்குவதில் திமுக, அதிமுக ஆட்சிகளுக்கிடையே வேறுபாடு இல்லை என்று தெரிந்தும் அதிமுக ஆட்சிக்கு வர நாம் ஏன் உதவ வேண்டும். இப்போது அவசரமாகக் கலைஞரைப் பதவியிறக்கி, அம்மையாரை அரியணையில் அமர்த்தி நாம் சாதிக்கப் போவது என்ன? – அரசு அலுவலகங்களில் தொங்கும் படம் மாறும் என்பதைத் தவிர?
ஐந்தாண்டு கழித்து (ஜெயின் உண்மை உருவத்தைப் பார்த்து, ‘அதிர்ந்து’போய், மேடை, சிறை, வழக்கு, வாய்தாவெல்லாம் முடித்து) – அடுத்த தேர்தலில் கலைஞருக்கு ஆதரவு கேட்க மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்?
அவரை எதிர்ப்பதற்காக இவரையும், இவரை எதிர்ப்பதற்காக அவரையும் ஆதரித்து தேர்தலுக்குத் தேர்தல் கால்பந்தாக மாறி.. ஐயகோ.. அதைத்தானே இயக்குனரே, எங்கள் அன்பிற்கினிய வைகோ அவர்களும் தோழர் திருமாவளவனும் செய்து கொண்டிருக்கிறார்கள். காலங்காலமாகத் தமிழகம் இந்தக் கால்பந்து விளையாட்டைத்தானே பார்த்துக் கொண்டிருக்கிறது!
தமிழக அரசியல் என்பது ரங்க ராட்டினமாகி வெகுகாலமாகிவிட்டது. திமுகவும் அதிமுகவும் மேலும் கீழுமாகப் போய் வந்துகொண்டிருக்கின்றன. இதில் ஏறினால் மேலும் கீழுமாகச் சுற்றிச் சுற்றி, ‘தலைசுற்றிப்’ போகலாமே தவிர, வேறு ஊருக்குப் பயணம் போக முடியாது. இதை மக்கள் தெரிந்து கொண்டார்கள்… அதனால்தான் ஒரு மாற்று அரசியலை எதிர்பார்த்து தவம் கிடக்கிறார்கள்.
விஜயகாந்த் இட்டு நிரப்ப முயன்றது இந்த இடத்தைத்தான். இரு கழகங்களுக்கும் மாற்றாக அவர் இருப்பார் என்று நம்பித்தான் மக்கள் இன்றைய இடத்தை அவருக்குக் கொடுத்திருக்கிறார்கள்.
ஆனால் அவரும் மக்களை ஏமாற்றிவிட்டார். ஊழலற்ற நல்லாட்சி என்ற அடிப்படையில்தான் அவர் மக்களை அணுகினார். தமிழினம், தமிழர் இறையாண்மை என்ற அடிப்படையில் அணுகவில்லை. எனவேதான் காங்கிரசுக்குக் கைகொடுக்கும் நிலைக்கு நெருங்கி வந்தார். காலாவதியாகிப் போன இந்திய இறையாண்மை என்ற இறகுத் தொப்பியை அணிந்து வந்தவர் அவர். தமிழக அரசியல் வெற்றிடத்தை அவரால் நிரப்ப முடியாது என்பது நிதர்சனம்!
காங்கிரஸ் கட்சியைத் தமிழகத்தில் இருந்து ஒழிக்க வேண்டும் என்பது அவர்கள் தமிழீழத்தைச் சிதைத்தார்கள் என்பதற்காக மட்டும்தானா? இல்லவே இல்லை. இன்னும் விரிந்த நோக்கில், நம் தெளிய, நேரிய நோக்கமான ‘தேசிய இனங்களின் தன்னுரிமை, இறையாண்மை பெற்ற தமிழ்நாடு’ ஆகியவற்றின் முழுமுதல் எதிரியாகவும் இருப்பதால்தானே?
உங்களிடம் தமிழினம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை நீங்கள் உணரவேண்டும். ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் போராடுவதற்கு அன்று இந்தியத் தேசியம் தேவைப்பட்டது. இந்திய சுதந்திரத்தோடு அதன் தேவை முடிந்துபோய் விட்டது. காங்கிரஸ் கட்சி அத்தோடு கலைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மாறாக, தமிழர்கள் உள்ளிட்ட அனைத்துத் தேசிய இன மக்களுக்கும் எதிராக வளர்ந்து, அடித்துத் தின்ன முயன்றது. ஆதனால் ‘திராவிட தேசியத்தின்’ தேவை உருவானது. திமுக அபரிதமான வெற்றி பெற்றது. ஆனால் பதவி நாற்காலியில் அமர்ந்த பின் தன் கொள்கைகளைக் கைகழுவி விட்டது. திமுக வும் எதிர்க்கட்சியான அதிமுக வும் மீண்டும் ‘இந்திய தேசியத்’தைச் தூக்கிச் சுமக்கப் போட்டியிடுகின்றன.
பதவிக்காக இந்தக் கழகங்கள் போட்டுக் கொள்ளும் பங்காளிச் சண்டை காங்கிரசுக்கு மறுபிறவி கொடுத்துவிட்டது. ‘எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கும்’ என்ற அடிப்படையில் காங்கிரசைத் தமிழ்நாட்டிலிருந்து ஒழித்தால் கழகங்கள் இரண்டும் தமிழ்நாட்டை, தமிழரை முன்னிறுத்தி அரசியல் செய்ய வேண்டி வரும். அந்த நிலையை ஏற்படுத்துவதே நம் போன்றோரின் அவசரக் கடமை.
தமிழ்த் தேசியமே இன்றைய தேவை. அதை அரசியல் நிலைப்பாடாகக் கொண்டு, களம் காணும் அரசியற் கட்சிகளே இல்லை என்ற நிலையில் நீஙகள் அந்த இடத்தைப் பூர்த்தி செய்கிறீர்கள் சீமான் அவர்களே… உங்கள் பொறுப்பு பெரும் பொறுப்பு. எதிர்காலத் தமிழினத்திற்கு நீங்கள் ஆற்றும் மகத்தான கடமை!
சிங்களன் தமிழ் மீனவனை நோக்கிச் சுடும் ஒவ்வொரு தோட்டாவிலும் இந்திய இறையாண்மை பொத்தலாகிக் கிழிந்து தொங்கும் நேரம் இது! இரண்டகம் செய்யும் இரட்டையர்களான திமுக வையும் அதிமுக வையும் ஒன்றாகக் கருதி, ஒரு சேர தனிமைப்படுத்த வேண்டும். பதவி அரசியலை- சந்தர்ப்பவாதக் கூட்டணி அரசியலை மறுதலிக்க வேண்டும். தேர்தல் வரட்டும், போகட்டும். ஆனால் இந்த கொள்கை வழித் தமிழ்த் தேசியப் போராட்டத்தை முன்னெடுப்பது உங்கள் பணியாக இருக்க வேண்டும். இதை நீங்கள் செய்தால் எம்மைப் போன்ற தமிழ் உணர்வாளர்களின் ஆதரவு கிட்டும்.
தமிழ்த் தேசிய இயக்கங்கள் வலுவாக உங்கள் பின்னால் அணிவகுப்பார்கள். உலகத் தமிழர்கள் வலுக்கூட்டுவார்கள். நாளை அழிக்க முடியாத பெரும் அரசியல் சக்தியாக உருவெடுக்கலாம்.
அதைவிடுத்து நீங்களும் அரசியல் சதுரங்கத்தில் பகடையாக மாறி உருண்டீர்களானால், நாங்கள் பதைபதைத்துப் பார்த்து பத்தடி தள்ளி நிற்பதைத் தவிர வேறென்ன செய்வது?
நான் என்ன செய்யட்டும், பகலவன் படப்பிடிப்பை இப்போதே நடத்தலாமா என்று நண்பர்களைக் கேட்கிறீர்கள். சரி என்னுடைய யோசனையைச் சொல்கிறேன்.
ஐந்து ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்க வேண்டாம். ஊர் ஊராகச் சென்று ‘நாம் தமிழர்’ கட்சி அமைப்பை வலுப்படுத்துங்கள். தமிழ்த் தேசியச் சிந்தனையை மக்களிடம் வலுவாக வளர்த்தெடுங்கள். காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் மட்டும் எதிர்த்துப் பரப்புரை செய்யலாம்.
இல்லை, இந்தத் தேர்தலிலேயே நின்றாக வேண்டும் என்றால், நல்லது, காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் மட்டும் போட்டியிடுங்கள். காங்கிரசை எதிர்த்துத் தோற்கடிப்போம்.
மற்றத் தொகுதிகளில் ‘திமுக வும் அதிமுக வும் ஒன்றே’ என்ற நிலைப்பாட்டை எடுங்கள். ’49 ஓ’ வுக்குக் குரல் கொடுங்கள். அது உங்களுக்கு உடன்பாடு இல்லை எனில், யார் வென்றால் என்ன, அந்தத் தொகுதிகளைப் பற்றி கவலையில்லை என்று முடிவெடுங்கள்.
இலங்கைப் புறக்கணிப்பை வலுவாக மேற்கொள்வோம். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயல்பாடுகளைத் தமிழகத்தில் கொண்டு வருவோம். தமிழீழமும் தமிழ்நாடும் ஒன்றாக விடியல் காணட்டும்!
இதையெல்லாம் செய்தபின் பகலவனுக்காகவும் நேரம் ஒதுக்கினால், நல்லது.. சொல்லியனுப்புங்கள், நானும் வந்து பாடல் எழுதுகிறேன்.
திரை அதிர, தமிழனின் சிறை உடைப்போம்!
என்றும் அடங்கா தமிழ்த் தாகத்தோடு
உங்கள்
தாமரை
20.01.2011
சென்னை 24
நன்றி:நக்கீரன்
அது என்ன ஆத்திரம்!- கமல் மீது அண்ணன் அறிவுமதியின் சீற்றம்
தமிழ் கவிஞர் தன் பாராட்டு விழாவுக்கு அறிவுஜீவி கமலை அழைத்து அரியணையில் அமரவைப்பதும்,தமிழக முதல்வர் பேரன் தன் தயாரிப்பில் தமிழனை தரங்குறைத்த வசனங்களை அரங்கேறிக்கொண்டிருக்கும் போது, அண்ணன் அறிவுமதி தன் கோபக்கனலை,தமிழனின் தன்மானத்தை, தன் பேனாவில் ஊற்றி நக்கீரனில் எழுதிய வரிகள் நம்மை சற்று ஆறுதல் படுத்துகிறது.
30.12.2010. இரவு.. சத்யம் திரையரங்கு
இரவுக் காட்சி
உடன் பிறந்தார் அழைக்க..
கமல் படம் மன்மதன் அம்பு.
மார்கழி மாத சபா ஒன்றுக்கு
வந்து விட்டோமோ
என்கிற அளவிற்கு
ஒரே கமலஹாஸன் களும்!
கமல ஹாஸிகளும்!
அடிக்கடி அய்யா பெரியாரின் முதுகில்
பதுங்கிக் கொண்டு
நூல்தனம் காட்டும் அவரை
பரமக்குடி பையன் என்றும்
பெரியாரின் பிள்ளை என்றும்
பிறழ உணர்ந்து உணர்த்தவும் முற்பட்டவர்கள்
இந்த அம்பு இராம பக்தர்களின் கைகளிலிருந்து
இராவண திசை நோக்கி
குறிவைக்கப் படுகிற அம்புகளில் ஒன்று
என்பதை உணர்ந்து திருந்துதல் நல்லது.
கவிஞர், அறிவுஜீவி, நாத்திகர் எனப்
பெரும்பகுதித் தமிழர்களுக்கு
அறிமுகமானவர்,
நவராத்திரித் தமிழனை
தசாவதாரத்தால் முறியடிக்கவும் முயன்றுபார்த்தவர் கமல்.
இந்த மன்மத அம்புவின் வாயிலாக
தமிழர்களை, தமிழர்கள் இன உணர்வை,
தாய்த் தமிழை இழிவு செய்வதில்
உயிரே.. மணிரத்னம், அங்கவை சங்கவை
புகழ் சுஜாதா ஆகியோரைத்
தாண்ட முயற்சி செய்திருக்கிறார்.
“தமிழ் சாகுமாம்
தமிழ் தெருப் பொறுக்குமாம்.
வீடிழந்து, நாடிழந்து,
அக்காள் தங்கைகளின்
வாழ்விழந்து
ஏதிலிகளாய் இடப்பெயர்வுற்று
கொத்துக் கொத்தாய்
தம்
சொந்தங்களை
மொத்தமாய்ப் பலியெடுத்த
கொடுமைகளுக்கு
இன்னும் அழுதே முடிக்காத
அவர்கள் வாழும் (அ) பிழைக்கும்
இடத்திற்கே போய்..
பனையேறி விழுந்தவரை
மாடு
மிதித்ததைப் போலஞ்
வாடகை வண்டி ஓட்டுகிறவராக
ஓர் ஈழத் தமிழரை.. தங்களிடம்..
பாத்திரம்.. பிச்சைக் கேட்பவராக..
கதா பாத்திரமாக்கி..
ஒரு செருப்பாக அன்று..
இரு செருப்பாகவும்
என்று
கெஞ்ச வைத்து..
இறுதியில்
அந்த எங்கள்
ஈழத் தமிழரை
செருப்பால் அடிக்கவும்
ஆசைப்பட்டு ஏதோவோர்
ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள
முயன்றிருக்கிறீர்களே
கமல்!
அது என்ன ஆத்திரம்!
போர்க்குற்றவாளியாகிய அந்தக்
கயவனின் தானோடு ஆடுகிற
சதைதானா உங்களுடையதும்! ஆம்..
சதைதானே உங்களுடையதும்!
அந்த உலகநாடுகளில் போய்.. பாருங்கள்.
அங்குள்ள கோயில்களில்
கழுத்துகள் நிறைய, கைகள் நிறைய
தங்க நகைகளாய்த் தொங்க விட்டு
உங்களவர்களை அர்ச்சகர்களாக
அவர்களைப் பார்த்து, பாதுகாத்து மகிழ்வதை!
தங்கள் பிள்ளைகளுக்கான
பரதநாட்டிய பயிற்சிக்காவும்,
அரங்கேற்றத்திற்காகவும்
இலட்சம் இலட்சமாய்க் கொட்டிக்
கொடுத்து அழைத்து, வரவேற்று,
சுற்றிக் காட்டி, கண்கலங்க
வழியனுப்பி வைத்து நெகிழ்வதை!
இந்தப் படம் எடுக்கப்போன
இடங்களில் கூட நீங்கள்
பெரிய நடிகர் என்பதற்காக
உங்களுக்காக
தங்கள் நேரத்தை வீணாக்கி
தாங்கள் சம்பாதித்த பணத்தை வீணாக்கி,
எவ்வளவோ உதவியிருப்பார்களே!
அத்தகைய பண்பாடு மிக்க
எங்கள் ஈழத்தமிழ் உறவுகளுக்கு
நீங்கள் காட்டுகிற
நன்றி இதுதானா கமல்!
செருப்புதானா கமல்!
ஈழத் தமிழ் என்றால்
எங்களுக் கெல்லாம்
கண்ணீர்த்
தமிழ்!
குருதித்
தமிழ்!
இசைப்பிரியா என்கிற
ஊடகத் தமிழ்த்தங்கை
உச்சரித்த
வலிசுமந்த
தமிழ்!
ஆனால்.. உங்களுக்கு மட்டும்
எப்படி கமல்
அது
எப்போதும்
நகைச் சுவைத்
தமிழாக மட்டுமே
மாறிவிடுகிறது!
பேசி நடிக்கத் தமிழ் வேண்டும்.
தாங்கள் நடித்த
படத்திற்குக் கோடிகோடியாய்
குவிக்க.. தமிழனின் பணம்
வேண்டும்.
ஆனால்
“அவன் தமிழ்
சாக வேண்டும்
அவன் தமிழ்
தெருப் பொறுக்க
வேண்டும்.”
தெருப் பொறுக்குதல்
கேவலமன்று.. கமல்.
அது
தெருவைத் தூய்மை
செய்தல்!
தோட்டி என்பவர்
தூய்மையின் தாய்..
தெருவை மட்டும் தூய்மை
செய்தவர்கள் இல்லை..
நாங்கள்
உலகையே
தூய்மை செய்தவர்கள்..
“யாதும் ஊரே யாவரும்‘
கேளிர்’ என்று
உலகையே பெருக்கியவர்கள்
எங்களைப் பார்த்து
உங்கள்
செருப்பைத் தூக்கிக்
காட்டிய
கமல் அவர்களே..
உங்களை
தமிழ்தான்
காப்பாற்றியது.
பசி நீக்கியது. நீங்கள்
வாழ்கிற வீடு, நீங்கள் போகிற
மகிழ்வுந்து,‘
நீங்கள் உடுத்துகிற உடை
அனைத்திலும்..
உங்கள்
பிள்ளைகள் படிக்கிற
படிப்பில்.. புன்னகையில்
எல்லாம்
எல்லாம்!
கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட
எங்கள்
ஈழத் தமிழ் உறவுகளின்
சதைப் பிசிறுகள்
இரத்தக் கவுச்சிகள்
அப்பிக் கிடக்கின்றன.
அப்பிக் கிடக்கின்றன.
மோந்து பாருங்கள்.
எங்கள் இரத்த வாடையை
மோந்து பாருங்கள்
மோந்தாலும்.. எங்கள் இரத்த வாடையை மீறி
உங்கள்
படத்தில் வருகிற
கைபேசியின் மேல் வருகிற
மூத்திர வாடைதானே உங்களுக்கு
அதிகமாய் வரும்.
கமல்..
நகைச் சுவை என்பது
கேட்கும் போது
சிரிக்க வைப்பது!
நினைக்கும் போது
அழ வைப்பது!
ஆனால் உங்கள்
நகைச்சுவை
செருப்பால் அடித்து
எங்களைச்
சிரிக்கச் சொல்கிறதே!
இதில் வேறு வீரம்..
அகிம்சைக்கான
வியாக்யானங்கள்!
அன்பான கமல்..
கைநாட்டு மரபிலிருந்து எங்களைக்
கையெழுத்து மரபிற்கு
அய்யாவும் அண்ணலும்
கரையேற்றி விட்டார்கள்.
இனியும் உங்கள்
சூழ்ச்சி செருப்புகளை
அரியணையில் வைத்து ஆளவிட்டு
அழகு பார்க்க மாட்டோம்.
சீதையைப் பார்த்து
“உயிரே போகுதே’
பாட மாட்டோம்.
சூர்ப்பநகையின் மூக்கறுபட்ட
வன்மம் அள்ளித்தான்
“உயிரே போகுதே’
பாடுவோம்.
ஆம்.. கமல்
தாங்கள் சொல்லியபடி..
எம்
தமிழ்
தெரு பொறுக்கும்!
எவன்
தெருவில்
எவன் வந்து
வாழ்வது
என்று
தெரு பொறுக்கும்!
அப்புறம்
எவன் நாட்டை
எவன்
ஆள்வது
என்ற
விழிப்பில்
நாடும்
பொறுக்கும்.
அதற்கு
வருவான்‘
வருவான்
வருவான்
“தலைவன்
வருவான்!’
இந்தத் தலைப்பையாவது
கொச்சை செய்யாமல்
விட்டுவிடுவது நல்லது கமல்.
நீங்கள் பிறந்த இனத்திற்கு
நீங்கள்
உண்மையாக
இருக்கிறீர்கள் கமல்!
நாங்கள்
பிறந்த
இனத்திற்கு
நாங்கள்
உண்மையாக இருக்க வேண்டாமா?
அன்புடன்
அறிவுமதி
வெற்றித்தாய்-பிரமித்தப் பதிவு
இயற்கையில் ஒவ்வொரு மனிதனும் திறமை வாய்ந்தவனாகவே பிறக்கிறான்.இடைவரும் வாழ்க்கையில் அவன் தன்னை எப்படி செதுக்கிக் கொள்கிறானோ அதைப் பொறுத்தே சிறந்த சிற்பமாக சிறக்கிறானா,இல்லையேல் பயனற்ற கற்கலாகிப் போகிறானா என்பது தெரியும்.போராட்டம் இல்லாத வாழ்க்கையில் எல்லோரும் வீரன்தான்.போராடுகின்ற சூழல் வரும்போதே வீரனுக்கும்,கோழைக்குமான வித்தியாசம் தெரிகிறது.வெற்றியாளனுக்கும்,தோல்வியடைந் தவனுக்குமான முயற்சி,உழைப்பு,விவேகம்,கொள்கை முரண் நமக்கு புரிகிறது.
அப்படித்தான் அந்த பெண்மணியின் வாழ்கையும்.அடுக்களையே வாழ்க்கையாக,கணவனுக்கு நல்ல மனைவியாகவும்,பிள்ளைகளுக்கு நல்ல தாயாகவும் மட்டுமே அடையாளம் தெரிந்தவர்.உடல்நிலை பாதிப்பால் தன் கணவர் இறந்துவிட, கணவனை இழந்தோம்,கைவிடப்பட்டோம்,பிள்ளைகளை வைத்துக்கொண்டு எதிர்வரும் வாழ்க்கையை எப்படி எதிர்க்கொள்ளப் போகிறோம் என அஞ்சி நடுங்கிடாமல்..அயற்சியில் உறங்கிடாமல்,அயராது உழைத்து ,பாரதிக் கண்ட புதுமைப் பெண்ணான போதுதான் அவருள் பொதிந்திருந்த போற்றத்தக்க வெற்றித்தாய் வெளியே தெரிந்தார்.அந்த தாய் என் தோழியின் தாய் என்பதில் எமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.அந்த தன்னம்பிக்கை மிக்க தாயின் கடின உழைப்பையும்,விடாமுயற்சியையும் அந்த கட்டுரையில் கண்டேன்.அவர் தன்னம்பிக்கை கண்டு ,வாழ்வை வென்ற திறமை கண்டு பிரமித்து நின்றேன்.
நீங்களும் பிரமிக்க..கீழே கிளிக் செய்யுங்கள்…
கடல் கால் அளவே…………
என்னில் வலியுண்டாக்கிய பதிவு..
வலி மிகுந்த வார்த்தை.
பொருள் பொதிந்த வரிகள்.
ஆழமான எழுத்துக்கள்.
அனுபவிப்பின் அவஸ்தைகள்.
நிச்சயம் அவை,அவர் அடிமனதின்
ஆழத்திலிருந்தே வந்திருக்க வேண்டும்.
மேலோட்டமான சிந்தனைகளில் பிடிபடாதது..
படிக்கின்ற போதே என்னை அறியாமல்
கனத்தது நெஞ்சம் கண்ணீரோடு.
துள்ளி ஆடிய குழந்தைகள்,
அள்ளி மகிழ்ந்த பெற்றோர்கள்,
கற்பிழந்த பெண்கள்,
முடமாக்கப்பட்ட முதியவர்கள்,
எண்ணிலடங்கா விதவைகள்,
விதையுண்டப் போராளிகள் என ஓர் பெரும் தமிழ்சமுதாயம்
பெயர் தெரியாமல் போனதே!
சுகவாசிகளாய்,சு(க)வாசம் அனுபவித்துக் கொண்டு,
தீபாவளிக்காக புதுத்துணி வாங்கியும்,
பட்சணங்கள் தயாரித்தும்,
பட்டாசு வாங்கியும் நாமிங்கே
பட்டாசுகளாகவும்,திரிகளாகவும் பற்றியெரிந்த மக்களங்கே.
படித்து முடித்து துடித்து விட்டேன்.
ஆம்..வாசித்துப் பாருங்கள்..அந்த வலிமிகுந்த வார்த்தைகளை..
வலைப்பதிவு வாசகர்களுக்கு..
அந்தப் பதிவை படித்து முடித்ததும், முதலில் எனக்கு ஏற்ப்பட்டது, நானும் தமிழன் என்கிறப் பெருமிதம்தான்.அது உண்டு பண்ணின நெகிழ்ச்சி அப்படி. நம் உடன்பிறப்பான ஓர் தமிழன் செய்யும் அளப்பரிய சேவை,தன்னிகரில்லாத் தொண்டு தரணிக்கு தெரிந்திருக்கிறது.தமிழனுக்கும்,தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்ந்திருக்கிறது.தமிழ்நாட்டிலுள்ள நமக்கு தெரிய இவ்வளவு நாட்களாகி இருக்கிறது.இங்கே உள்ள எந்த ஊடகங்களும் அந்த மாமனிதனை அடையாளம் கட்டவில்லை..அதனால் யாம் அறியவும் வாய்ப்பில்லை.அழுக்கடைந்த மனிதரைப் பார்த்தாலே ஆறடி தள்ளி நிற்கும் அழுக்கு உள்ளம் படைத்தோர் நாம்.ஆனால் அரவணைத்து உணவூட்டுகிறது அவரின் தெளிந்த உள்ளம்.மனநிலை,மூளை வளர்ச்சிக் குன்றியவர் நம் குறுகியப் பார்வையில் பைத்தியம்,கிறுக்கு.அந்தத் தமிழனின் அகன்றப் பார்வையில் அன்புக்குரியவர்கள்.
அந்த தமிழனை,தலைவனை பற்றி மேலும் அறிந்து கொள்ள..
தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு!!
2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்
குறிப்பு: பதிவுலகத்துல நண்பர்களுக்காகவும்,நல்லப் பதிவுகளுக்காகவும் ஓட்டுப் போட ஆர்வம் காட்டும் நாம்,இந்த தலையாய தமிழனுக்கோர் ஓட்டிடலாமே!இது ஒவ்வொரு தமிழனின் தலையாயக் கடமை.மறக்காமல் போடுங்கள் ஓட்டு.








