Posts filed under ‘குமுறல்’
ஜனங்களின் உணர்வறியா ஜனநாயகம்!
அணு உலை வேண்டாமென்று
ஆதங்கப்படுவோர் ஆயிரமாயிரம் பேர்
அடுத்த தலைமுறை உயிர் காக்க
வேட்கை கொண்டோர் லட்சம் பேர்
சில கோடி செலவுகளுக்காய்
பல கோடி மக்களின்
உயிர் பறித்திட வேண்டாமென
மன்றாடுவோறாய்,மனிதாபிமானிகளாய்
மக்களாய்,உணர்வாளர்களாய்
உண்மை அறிந்தோராய்
உண்ணாவிரதம்,போராட்டம் என
ஊனுடல் தந்து உரிமைக்கேட்போராய்
கோடி பேர்!
பாதுகாக்கப்பட்ட அணுஉலை என்று
ஒற்றை வார்த்தை சொல்லி
தன்னை பாதுகாத்துக் கொள்கிறது
கோடிமனங்களின் குணம் அறியா
ஓர் கொடிய அரசு!
ஜனங்களின் உணர்வறியா
இந்நாட்டை ஜனநாயக நாடு என்பார்
கொடுமையிலும் கொடுமை..!
மனிதம் மரணித்துப்போன சமுதாயம்!
(என்னை பாதித்த புகைப்படம்)
உண்ண உணவற்ற
இவர்களின் நிலைதான்
இப்புகைப்படத்தைப்
பார்க்கும் போது
எழுத வார்தையற்ற
என் நிலையும்!
இச் கொட்டுவதைதவிர
வேறெதுவும்
செய்ய இயலா இயலாமையில்
நானும் என் மனிதாபிமானமும்
மனிதம் மரணித்துப்போன
இந்த சர்வதேசத்தில்!
டாக்டர் கேப்டன் எஞ்சினியர் அழைக்கிறார்!
பயணத்தில் நம்மைக் கடக்கும் மரங்கள்,பக்கவாட்டு மாடமாளிகைகள்,குடிசைகள் கோபுரங்கள்,வாழ்வாதார வயல்கள்,மானுடர்களின் வாழ்வியல்கள்,பயண மனிதர்களின் முக இயபுகள்,உணர்வுகள் என்பன தவிர, எனது பயணப் பொழுதுகளை எப்போதும் வேறு எந்த விடயத்திற்காகவும் நான் விரயமாக்குவதில்லை.பயணத்தில் இரண்டு மூன்று முறை புத்தகம் படிக்க முயன்றிருக்கிறேன்.இசையில் லயிக்க ஏதேதோ செய்திருக்கிறேன்.ஆனால் அவையெல்லாம் என்னை தன் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வருவதில்லைஅவைகளால் எம்மைக் கட்டுப் படுத்த முடிவதுமில்லை.
ஏனோ வேடிக்கைப் பார்ப்பதிலும்,வாழ்வியலை ரசிப்பதிலுமே ஓர் தனி ரசனை உள்ளதாக உணர்வேன்.பயணத்தில் வரும் குழந்தையின் குறும்பு, குடும்ப சண்டைகள்,அன்யோன்யமான காதலர்கள்,நக்கலடிக்கும் நண்பர்கள் கூட்டம்,டாட்டா கட்டும் மரங்களின் பின்னோக்கிய அணிவகுப்பு என ரசிக்கிற விஷயங்கள் நிறைய இருக்கும் போது இசையில் நனைவதோ,புத்தகத்தில் மூழ்குவதோ எம்மைக் கவர்வதில்லை.ஓர் புத்தகத்தில் மூழ்கி,ஓர் இசைகோர்ப்பில் இணைந்து ஏனைய வாழ்வியல் நிகழ்வு நாவல்களையும்,இயற்கையின் இசை சுரத்தையும் சுவாசிக்க மறப்பதாய் உணர்வு.ஒவ்வொரு பயண அனுபவமும் ஓர் நல்ல அனுபவத்தை, ரசனையை,வேகத்தை எமக்கு தரும்.சில நேரங்களில் அவற்றை நினைவு படுத்தி சிலாகிப்பேன்.சில நேரம் கொதிப்பேன்.சில நேரம் சிரிப்பேன்.சிந்திப்பேன் என சொல்லிக் கொண்டே போகலாம்.
அப்படித்தான், எனது சமீபத்திய பயணத்தில் என்னை ரசிக்க வைத்த நிகழ்வு அது,என் பயண வழிநெடுக விஜயகாந்த் சேலம் மாநாட்டு பேனர்கள்…கேப்டன் அழைக்கிறார்,அண்ணியார் வருகிறார்,விருதகிரியார்,புரட்சிக் கலைஞர் அழைக்கிறார் என எத்தனையோ வாசகங்களில் அழைத்துக்கொண்டிருந்தார் அவர்..
ஆனாலும் எமைக் கவர்ந்தது அந்த வாசகம் தான்…ரசிக்க வைத்தது ..கொஞ்சம் சிரித்து ருசிக்கவும்..
டாக்டர் கேப்டன் அழைக்கிறார்…
நல்லவேளை கேப்டன் எஞ்சினியரிங் படிக்கல..இல்ல டாக்டர் கேப்டன் எஞ்சினியர் அழைக்கிறார்னு போட்டிருப்பாங்க! :)
பணக்கார நாடு இந்தியா!!
அன்று மாலை மணி 6 .30 இருக்கும்.அலுவலகம் முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கிறேன்.போகும் வழியில் இடை வழியில் இருக்கும் ஓர் உணவகத்தில் எப்போதும் இரவு உணவு வாங்கிச்செல்வது வழக்கம்.அன்றும் அப்படித்தான்..ஐந்து ,ஐந்து இட்லி..ரெண்டு பார்சல்.. என ஆர்டரை கொடுத்துவிட்டு அமர்ந்திருக்கிறேன்.
ஒட்டியக் கன்னமும்,கிழிந்த சட்டையும்,இல்லாத வயிறும்,அழுக்கேறிய உடலுமாய் அவன் வருகிறான்.யூ நோ ஹிந்தி ஆர் இங்கிலீஷ் என தன் சம்பாஷனையை ஹோட்டல் ஊழியரிடம் ஆரம்பிக்கிறான்.
ம்ஹூம்..எனக்கு தெரியாது..தமிழு பேசுவியா நீயி ?என ஹோட்டல் ஊழியர் அவனிடம் வினவுகிறார்.
தெரியாது என மண்டையாட்டுபவனிடம் தன் உணவகத்தில் வேலை செய்யும் இன்னொரு ஊழியனை அறிமுகம் செய்கிறார் அவர்.
அவன் ஹிந்தியில் அவனிடம் வினவ, இருவர் முகத்திலும் உற்சாகம்.எல்லாம் மொழிப்பாசம் தான்..வேலை கிடைக்குமா எனக்கு இங்கே? என பேசிக்கொண்டிருக்கிறான் வந்தவன்.பார்சல் வரும்வரை சில நிமிடங்கள் அவர்களை எம் கண்கள் நோக்கின.
அதற்கிடையில் உணவக ஊழியர்களின் உற்சாகமிக்கப் பேச்சு என் செவிப்பறை தொடுகிறது…
ஓனருக்கு போனப் போடு.இந்த மாதிரி ஆளுங்க கிடைக்கிறது கஷ்டம். .ஆளப் பாத்தாலே தெரியுது.. போடுறதத் தின்னுட்டு,கொடுக்கிற சம்பளத்த வாங்கி கிட்டு கொத்தடிமையா கெடப்பான்னு.
அதற்கிடையில் எனக்கானப் பார்சல் கட்டப்பட்டிருக்கிறது..சார் பார்சல் என ஹோட்டல் ஊழியர் அழைக்கிறார்..பார்சலை வாங்கிக்கொண்டு,அவர்களின் பேச்சினையும் உள்வாங்கிக்கொண்டு ரணமான இதயத்தோடு…பாவம் இவர்கள் வேலையாவது அவனுக்கு கொடுக்கட்டும்,சம்பளம் குறைவாயினும் வேலையும்,சாப்பாடுமாவது அவனுக்கு கிடைக்கட்டும், என வேண்டிக்கொண்டு வெளியேறுகிறேன் ஹோட்டலை விட்டு..
நூறடிக் கடந்திருப்பேன்..அவனும் வெளிவருகிறான்..ஹோட்டல் ஓனர் வேண்டாமென சொல்லிவிட்டார்ப் போலும்..
பக்கத்துக் கடையை நோக்கி பயணிக்கின்றன அவன் வறுமை தோய்ந்த கால்கள்..அங்காவது வேலைக் கிடைக்குமா.எத்தனை கடைகளை அவன் கால்கள் ஏறி மிதித்தனவோ தெரியவில்லை.அன்றாடம் இந்த அல்லல் மிகுந்த வாழ்க்கையில் எத்தனையோப் பேர் அல்லாடிக் கொண்டுதானிருக்கிறார்கள்..உலக தரவரிசைப் பட்டியலில் மட்டும் இந்தியாவின் பணக்காரர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது..
பாரமில்லாத அவனது நடை என் மனதை பாரமாக்கியது..
எந்திரனும்..அந்நியனும்..
அலுவலகம்,பேருந்து,உணவகம்,இணையம்,சமூக வலைப் பின்னல்கள்,நடைபாதை,தெரு,நண்பர்கள்,கழிப்பிடம் என கிட்டத்தட்ட இந்த ஓரிரு வாரங்களாகவே ஒரே டாக்தான். ஏதோ திருவிழாவை எதிர்நோக்குவது போன்று மக்களின் எதிர்ப்பார்ப்பு.பத்துப்பேரில் ஒருவர்,இருவராவது தவறாமல் அதனைப் பற்றி பேசியும்,சிலாகித்தும்,பெருமைப்பட்டும் கொண்டிருக்கிறார்கள்.
ஒருபக்கம் டிக்கெட் வாங்கும் சாதனைக்காக தங்களை தயார்ப் படுத்திக் கொண்டிருந்தார்கள்,கொண்டிருக்கிறார்கள்.இன்னொருப்பக்கம் டிக்கெட் வாங்கிய சாதனையை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.100 ரூபாய் டிக்கெட் 500 ரூபாய் 1000 என்றெல்லாம் ஆங்காங்கே கொக்கரிக்கிறார்கள்..எவ்வளவு ஆனாலும் பரவால.. தலைவர் படத்தை முதல் நாள் பாக்கணும் எடு.என ஒருக்கூட்டம் கூக்குரலிடுகிறார்கள்.ரஜினி நடித்த ரோபோ என்கிற எந்திரனுக்கு டிக்கெட் வாங்குவதற்கும்,படம் பார்ப்பதற்கும் தான் இந்த அலப்பறை.. புளித்துப்போன இந்த செய்தியை திரும்பத் திரும்ப,திரும்புமிடங்களில் எல்லாம் கேட்டு வெறுத்துப்போயிருந்தேன்.
அவர்கள் படம் பார்க்கும் ஆர்வத்தில் பேசுவதாலோ,ரஜினி மீதுள்ள அபிமானத்தில் டிக்கெட் வாங்க முயச்சிப்பதாலோ அல்ல அந்த வெறுப்பு.இந்த வெறியோ,வேகமோ,உணர்வோ ஈழத்தில் உக்கிரமானப் போரில் நம் இனத்தான் செத்தானே அன்று இருந்திருக்கலாமே.அதற்காகப் போராட பயன்பட்டிருக்கலாமே.(யாருமே போராடவில்லை என்றுக் கூற நான் முன்வரவில்லை)இப்படி டிக்கெட் வாங்க அலைமோதுகிற இனமே,இளைய சமுதாயம் ஒன்று கூடியிருந்தால் வரலாற்றை திருப்பி போட்டிருக்கலாமே!குறைந்தபட்சம் இறந்தவனின் எண்ணிக்கையையாவது குறைத்திருக்கலாம்.நாமும் இனமானம் உள்ளவர்கள் தான் என்று இந்த உலகத்துக்கு உணர்த்தி இருக்கலாம்!
ஆனால் நமக்குதான் உடுத்த உடையும்,வாழ இடமும்,உண்ண உணவிருக்கோ இல்லையோ குடிக்க சரக்கு மன்னிக்க தலைவர் கட் அவுட்டுக்கு ஊத்த சரக்கும் கவலையின்றி கிடைக்கிறதே..நாம் ஏன் கவலைப் பட வேண்டும்.(இது கனடாவிலும்,லண்டனிலும்,சுவிச்சர்லாந்திலும்,அமெரிக்காவிலும் இன்னும்பிற நாடுகளிலும் சுகவாசிகளாய் இருந்து கொண்டு எந்திரனுக்காய் போராடும் போராளிகள் அனைவர்க்கும் தான்)ஈழத்தில் போராடும் தமிழனுக்கு தலைவன் என்ற அங்கீகாரத்தில் போராளி இருக்கிறான்.இங்கே சினிமா கதாநாயகன் தானே எல்லோருக்கும் தலைவன்.எவன் செத்தாலும் கவலைக் கொள்ளாது சினிமாவில் கோடிகளில் கொடி கட்டி பறக்கும் கண்ணியவான்கள் தான் தமிழ் நாட்டு சிம்ம சொப்பனங்கள்.ஹீரோவுக்கு சூட்டிங்கில் சின்ன காயம் பட்டால் கூட நம் உள்ளம் வலிக்கும்,நெஞ்சம் துடிக்கும்.நாம் இளகிய மனது உள்ளவர்கள்.தமிழனாய்,நம் இனத்தானாய் இருந்தாலும் ஈழத்தவன் நமக்கு அந்நியன் என்று தானே இருக்கிறோம்..நமக்கேன் வலிக்கிறது.
இவன்களுக்கு வேற வேலையே இல்ல..இப்படித்தான் ஈழம்,தமிழ்ன்னு அது இதுன்னு வெட்டியா பேசுவான்க..வாங்க நாம எந்திரன் பாக்கப் போலாம் …











