Posts filed under ‘விகடன் குட் ப்ளாக்ஸ்’
600 வது பதிவு – மரண தண்டனை மரணித்து போகட்டும்!
இன்று வெற்றிகரமாக அறுநூறாவது பதிவை எழுதுகிறேன்.
இச்சமயத்தில் எனக்கு இதுவரை ஆதரவு தந்து வாழ்த்திய அன்புள்ளங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டு ,இது தினசரி நானெழுதும் சராசரி பதிவாகிவிடாமல் என்னால் இயன்ற அளவு ஓர் ஆக்கபூர்வமான பதிவாய் பதிவு செய்ய வேண்டும்,அது ஆரோக்கியமானதாகவும் இருக்கவேண்டும் சமுதாயத்திற்கு ஏதேனும் பயன்பட வேண்டும் என்று எண்ணி எழுத ஆரம்பிக்கின்றேன்.என்னுடைய அறுநூறாவது பதிவு வரும் இவ்வேளையில் ,ஒவ்வொரு தமிழனும் இடைவிடாது பேசி வரும் தமிழனுக்கு ஏற்பட்ட இன்னல்,சிறைக்கம்பிகளுக்குள் சிக்கிக்கொண்டு மரணதண்டனை பற்றிய எண்ணங்களோடு உறங்க மறுக்கும் விழிகளோடு ஒவ்வொரு நாளையும் கடத்தும் நம் தமிழ் சகோதரர்கள் பற்றிய எண்ணங்களே என் முன் நிழலாடுகின்றன.இன்று தமிழனின் ஒருமித்த குரலாய் கேட்கும் மரணதண்டனை நீக்கப்பட வேண்டும் என்ற கருத்து நம் தமிழ் சகோதரர்களுக்கு மட்டுமான தனித்த குரல் அன்று..
ஒட்டுமொத்தமாய் இந்நாட்டிலிருந்தும்,நம் சட்டத்திலிருந்தும் அது அகற்றப்பட வேண்டும் என்பதே மனிதாபிமானிகளின் ,உணர்வாளர்களின் அவா!
இந்த சூழலில்தான் நண்பர்கள் சிலர் அந்தக் கேள்வியை என்னிடம் கேட்டு வைக்கிறார்கள்.தமிழர்களுக்காக போராடுவது சரி,ஏன் மரண தண்டனையே வேண்டாமென்று போராடுகிறார்கள்..இந்நாட்டில் குழந்தையை வன்புணர்வு செய்து கொலை செய்தவனை நீங்கள் அறியவில்லையா?பெற்ற பெண்ணையே கற்பழித்து கொடுமை செய்தவனை நீங்கள் கேள்விப்பட வில்லையா?மும்பையில் அப்பாவி மக்கைளை கொன்று குவித்தார்களே அவர்களுக்கும் நீங்கள் நீதி கோருகிறீர்களா என்று?அவர்கள் கேட்பதில் நியாயம் இருக்கிறது என்று நாம் எண்ணினாலும்
இதற்கு நாம் பதில் ஆம் என்றுதான் சொல்ல வேண்டும்..ஆம் அவர்களுக்காகவும்தான் நாம் நீதி கோருகிறோம் என்றே சொல்ல வேண்டி இருக்கிறது.ஒவ்வொரு குற்றமும் ஒவ்வொரு நாளும் இந்த சமுதாயத்தில் நடந்தபடிதான் இருக்கிறது.அதில் மறைக்கப்பட்டவை நிறைய..வெளிச்சத்திற்கு வந்தவை வெகு சில.அதற்கான தண்டனைகளை நம் சட்டமும் அளித்துக் கொண்டுதானிருக்கிறது.ஆனால் குற்றங்கள் குறைந்தனவா??ஆட்டோ சங்கர் இறப்புக்குப் பின் இங்கே வன்புணர்வு,கற்பழிப்பு காணாமல் போய் விட்டதா?மனிதன் அவற்றைக்கண்டு அஞ்சுகிறானா?சதாம் உசேனுக்கு பின் இன்னொரு சதாம் உருவாக வாய்ப்பு இல்லை என்கிறீர்களா?
மனிதர்களுக்கு சில இயல்பு உண்டு.தன் குடும்பத்தில்,தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஒரு பிரச்சினை எனும் போதே உண்மை வலியில் துடிப்பார்கள்,அந்த பயந்த மனநிலையில் பயணிப்பார்கள்..மற்றவர்களுக்கு நேருவதை காணும் போது அது வெறும் உதவியாகவோ,இரக்கமாகவோ அல்லது அவனுக்கு நடக்கட்டும் என துச்சமாகவோ மட்டும் தான் எடுத்துக் கொள்வார்கள்.அந்த மனநிலைதான் மரண தண்டனை வேண்டும் என் வாதிடுபவர்களுக்கும்,வேண்டாம் என்பவர்களுக்குமான வித்யாசம்.இந்த இடத்தில் நாம் பாதிக்கப்பட்டவன் நம் குடும்பத்தில் ஒருவன் என எண்ணிப் பார்ப்போமானால் மரண தண்டனை வேண்டாம் என்பவனாகவே இருப்போம்.
இந்நிலையில்தான் நாம் ஒரு மனிதன் குற்றம் செய்வதற்கான பின்னணி,அவன் மனநிலையை எண்ணிப்பார்த்தல் அவசியம்.குற்றம் செய்த பலர் இவளை இப்போ கற்பழித்தாக வேண்டும் என திட்டத்தோடு செய்வதில்லை,குழந்தையை வன்புணர்வு செய்பவன் கூட..அந்த நேரத்தில் அவன் குடித்து போதையில் இருந்திருக்கலாம் அல்லது சொல்லொண்ணா எண்ண மாற்றத்தில் உடல் ரீதியான மனரீதியான மாற்றத்திற்கு உள்ளாகி இருக்கலாம்.அவன் அந்த சமயம் எனன செய்கிறோம் என யோசிக்காமல் அவன் வெறியை தீர்த்திருக்கலாம்.வெறி இருந்தாலும் அதனை ஆறாம் அறிவின் துணை கொண்டு அடக்கி கொள்பவன் சராசரி மனிதனாகிறான்..வரம்பு மீறுபவன் சைக்கோ மனநிலையில் இருந்திருக்கிறான்,இருக்கிறான்.சில நேரங்களில் எதிர் பாலினம் அணியும் உடை கூட ஒருவன் மனநிலையை மாற்றி காம இச்சை தூண்டும் காரணியாகி விடுகிறது.ஏன் பல வீடுகளில் சில நேரங்களில் தன் மனைவியையே அவள் விருப்பமின்றி வன்புணர்வு செய்யும் கணவன்மார்கள் இருக்கவே செய்கிறார்கள் .அதில் நீங்களும்,நானும் கூட இருக்கலாம்.அங்கு கணவன் என்ற அங்கிகாரம் மட்டுமே நம்மை காப்பாற்றி விடுகிறது.மனைவியின் விருப்பமின்றி நம் இச்சையை தீர்க்க செய்யும் அதுவும் ஒருவகையில் சமுதாயம் அங்கிகரித்த வன்புனர்வுதான் .
அதற்காக கொலை,கொள்ளை,கற்பழிப்பு சமூக குற்றங்கள் செய்யும் எல்லோருமே திட்டம் இல்லாமல் செய்பவர்கள் எனவும் நான் கூற முன்வரவில்லை..சிலர் திட்டமிட்டு கற்பழிப்பதும் உண்டு..குழந்தைகளை திட்டமிட்டு வன்புணர்வு செய்வதும் உண்டு.அவனுக்கு பெயர்தான் சைக்கோ. அது ஒரு வகையான மன வியாதி.அவனுக்கு அதுதான் சுகம் என்பதாய் எண்ணுகிறான்.சிலர் பரம்பரை பரம்பரையாக பகையுனர்வோடு,பழி தீர்க்கும் மனநிலையோடு வளர்வான்.. நீ அவனை பழி வாங்க வேண்டும் என சொல்லி வளர்க்கும் குடும்பங்களும் உண்டு..அவர்களுக்கு மரணதண்டனை பற்றிய அறிவு இல்லை என்கிறீர்களா?அவன் வெறிக்கு முன் சட்டம் ,தண்டனை என்பவையெல்லாம் பின்னுக்கு தள்ளப்படுகின்றன.அவன் மரண தண்டனை கொடுத்தாலும் எதிர் கொள்வோம் முதலில் எதிரியை கொல்வோம் எனும் மனநிலையிலேயே வளர்கிறான்.இதே மனநிலையில் வளர்பவன் தான் தீவிரவாதம் செய்பவனும்,தாம் கொண்ட கொள்கைக்காக அடுத்தவரை பலி தீர்ப்பது அல்லது எதிரி நாட்டை,மக்களை பலி கொள்வது.அந்த வெறிதான் எதிரியைக் கொன்று தாம் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையும் ஒருவனுக்கு வளர்க்கிறது.தன்னை தானே அழித்துக்கொள்ள துணிபவனை மரண தண்டனை எனன செய்துவிட இயலும்.அந்த மனநிலையில் இருப்பவனுக்கு அறிவும்,தெளிவும்தான் தேவை.ஒன்று அவனே திருந்த ,தெளிவுபட வேண்டும்.
மரண தண்டனை என்ற ஒற்றை சொல் அவன் எண்ணத்தை,வெறியை மாற்றி விட முடியாது.அவனுக்கு நிச்சயம் வேறு வகையான கடுமையான தண்டனைகள் தரலாம் சமுதாயத்தில் தவறு செய்யக்கூடாது என்பதற்கு முன் மாதிரியாக,ஆனால் மரண தண்டனைதான் சமுதாயத்தை சீர் படுத்தும் காரணி என கூறி விட முடியாது.மரண தண்டனை மட்டுமே மாற்றம் செய்ய வல்லது என்றால் சமுதாயத்தில் எந்த பிரச்சினையும் வந்திருக்காது.
ஒரு முறை என் சித்தப்பா கடுமையாக உடல் நிலை பாதிக்கப்பட்டு மரண விளிம்பில் அவசர ஊர்தியில் ஏற்றி வருகிறார்கள் எங்கள் வீட்டிற்கு.அது முதல் அவசர ஊர்தி பார்த்தாலே ஓர் பதற்றம் என்னில் சேர்ந்து கொண்டது சில நாட்கள்.இதனை என் நண்பர்களிடம் சொன்ன போது அவர்களுக்கும் அத்தகைய அனுபவம் இருப்பதாய் சொன்னார்கள்.அதே போல்தான் நடு ராத்திரியில் வீட்டு தொலைபேசிக்கு வரும் அழைப்புகள் கூட, யாருக்கு எனன ஆச்சோ என்கிற பயம் கலந்த மன அதிர்வை உண்டு செய்தது ஒரு காலத்தில்.ஏன் தந்தி பாவித்துக்கொண்டிருந்த சமயத்தில் தந்தி வந்திருக்கிறது என்றாலே பயம் வரும்.இந்த மனநிலைதான் மரண தண்டனை விதிக்கப்பட்டு மரணத்தை எதிர் கொள்பவனுக்கும்,அவன் குடும்பத்திற்கும்,ஒவ்வொரு நொடியும்… உணர்வீர்களா?
மரண தண்டனை என்பது தண்டனைக்கு உள்ளாகி இறப்பவனைக் காட்டிலும் அவன் குடும்பத்தையே அதிகம் பாதிக்கிறது,மனரீதியாக அந்த குடும்பத்தையும் பாதிக்கும் தண்டனையாகிறது.ஒரு கொலை செய்பவனைக் கூட்டி வந்து அங்கீகாரத்தோடு அரசாங்கம் செய்யும் கொலை.குற்றம் செய்தவனுக்கு எதிராக சட்டம் செய்கிற குற்றம்.கொலைக்கு கொலை தண்டனை என்பது எந்த ரீதியாக ஏற்றுக்கொள்ள இயல்கிறது.தண்டனையை கடுமையாக்கலாமே தவிர,கொல்வது என்பது மனிதாபிமானத்திற்கு எதிரான செயல்..
மனிதநேயம் வளர்ப்போம்!மரணதண்டனையை வேரறுப்போம்!!
400 வது பதிவு- ஓர் நாளில் மூவர் பிரசவம்
ஒரு தாய் தன் கருவை சுமக்கின்ற தருணம்..கரு சுமந்ததிலிருந்து அவள் பெறுகின்ற அகமகிழ்வு.வளரும் கருவை வயுறு தடவி பெறுகின்ற சுகம்.உதைப் பட்டபோதும் உள்ளம் மகிழ்கின்ற உணர்வு.வயிறு வளர வளர அவள் உடலில் ஏற்படும் வனப்பு.என கடக்கும் தருணங்களைத் தாண்டி அக்குழந்தையின் முகம் பாக்க துடிக்கின்ற ஏக்கம் எத்துனை சுகமானதோ,அவள் பெறுகின்ற பிரசவ வலியையும் தாண்டி..அத்தனை சுகம் சுமந்த பிரசவ நாள் இன்று..எனக்கும் ,என் உடன்பிறந்த தமையன் ஜெய் மற்றும் உடன் பிறவாத் தமையன் ராகுலுக்கும்.
—-000—
எனது பிரசவம் :
இன்று என் படைப்பாளி 400 வது படைப் பெழுதுகிறான்.ஓராண்டைக் கடந்து எனக்கும் இணையத்துக்குமான உறவுபாலம், என்னுடன் ஏனைய நண்பகளை இணைத்து வைத்திருக்கும் களம்.
எத்தனை உறவுகள்..என்மேல் பாசம் சுமந்து,என் எழுத்துக்களைப் படித்தும்,பாராட்டியும்,விமர்சித்தும் எம்மை செதுக்குகின்ற பண்பான நேசங்கள் எத்தனை..அது என்னில் உண்டாக்கி இருக்கும் நெகிழ்ச்சி.மட்டற்ற மகிழ்ச்சி.அதை என் சின்ன வார்த்தைகளால் எழுதி செதுக்கிட இயலாது.வலைப் பதிவு எமக்கு கொடுத்திருக்கும் உறவுகளை பற்றி எழுதினால் எமக்கு ஓராண்டு பத்தாது.இந்த தருணத்தில் எம்மேல் உரிமை மிகுந்த அந்த உறவுகள் அனைவர்க்கும் நன்றி சொல்லக் கடமைப்படுகிறேன்.
—-000—
எம் தமையன்களின் பிரசவம்: .
பல கனவுகளோடு கனவுப்பட்டறைக்குள் நுழைந்து ,தங்கள் கனவுகளை வெள்ளித்திரையில் நினைவாக்க வாடா போடா (திரைப்படம் ) பயிற்சிப் பட்டறையில் கலை இயக்குனனாய் ராகுலும் ,உதவி இயக்குனனாய் ஜெய்யும், வேலை செய்து இன்று வெள்ளித்திரையில் தங்கள் பெயர்களை ,முதன் முதலாய் உலகம் பார்க்க உரித்தாகும் நாள்.திரைத் துறையில் என்னிருத் தம்பிகளின் விலாசமும் விசாலப் படும் நாளின்று.ராகுல் மேலும் பல சிறந்த படங்கள் செய்து சீரிய முறையில் பெயர் விளங்கவும்,பார் போற்ற பவனி வரவும்,வெற்றி பல சூடவும்,இன்று உதவி இயக்குனனான ஜெய் ,விரைவில்இயக்குனனாய் ஜெயம் கொண்டு ,பரணி ஆளவும், இத்தரணி போற்றவும் வளம் வர இந் நன்நாளில் வாழ்த்துவதில், பெருமகிழ்வு கொள்கிறேன் தன் குழந்தையை பிரசவித்த தாயைப்போல!
நன்றி: யூத்புல் விகடன் குட் ப்ளாக்சில் தேர்வு செய்தமைக்கு.
என் கலைத்தேடலும் கவின் கலைக்கல்லூரியும் –XII
முதுநிலை இரண்டாமாண்டு:
முதுநிலை இரண்டாமாண்டு இதுதான்
என் கல்லூரி பயணத்தின் இறுதியாண்டும்
கூட.
சூசன் மேடம்
என் கல்லூரி வாழ்க்கையில்
மறக்க இயலாத ஆசிரியை.
நாம் அறியவும், தெளியவும்
அழகாக பயிற்றுவிப்பார்.
கலை வரலாறுகளை கரைத்து
குடித்திருப்பார்.
பாடங்களை அவர் பயிற்றுவித்த போது
இஸங்கள் என்றொரு இன்றியமையாத்
தலைப்பு கலைஞர்களின் வரலாறு
அப்பப்பா சொல்லி மாளாது.
எத்தனை இஸங்கள்
சுவையா சுகமா.. சோகமா..
கேள்வியா.. பதிலா.. குமுறலா..
குழந்தைத்தனமா.. கோபமா.. காதலா..
காவியமா.. ரவுடித்தனமா.. ரசனையா…
எண்ணிலடங்கா எத்தனை
விஷயங்கள..இல்லை இஸங்கள்..
என்னுள் எழுந்த கேள்விகளுக்கெல்லாம்
பதிலாய்.
கலைநயமிக்க கிளாசிஸம்
புகழ்பெற்ற கியூபிஸம்;
தாதாயிஸம், ஃப்யூச்சரிஸம்
என அப்பப்பா….
மிரட்டலும் குடியும்
கூத்தும், அழகும், அலட்டலும்
என அக்கால ஓவியர்களின்
உணர்ச்சிகள் தெரியலாயின.
தான் தோன்றித்தனமாய்
அவர்களின் பாங்கு..அவர்கள்
யாருக்கும் கட்டுப்பட்டவர்களாக
இல்லை..தனித்தன்மையை
வெளிக்காட்ட வித்திட்டவர்களாய்
இருந்தனர்.
அவர்களின் மனதில் எழுந்ததை
வரைந்துள்ளார்கள் பார்வையாளனைப்
பார்த்துப் பயப்படவில்லை.
சிலர் தன் வரைதலுக்காய்
பணமின்றி, பசியில் உழன்றபோதும்
இறங்கிவரவில்லை.. அவர்களின்
எண்ணங்களைவிட்டு.
அவர்கள் பாணி என்பது
பரிச்சயத்திற்கு தேவை என்பதை
உணர்ந்தவர்களாயிருந்தனர்.
தாம் அகம் மகிழ்ந்ததை
அனுபவித்ததை அரங்கேற்றி உள்ளனர்
அப்படித்தான்
பிக்காஸோ,போலக் எல்லாம்..
அரூப ஓவியங்கள் (modern art)
அழகியலை கடந்து ஆக்கத்தன்மையை
பதிவு செய்துள்ளனர்.
புரியலானேன் புதுமையை…
அச்சமயத்தில்தான்
ஓர் ஓவியக் கண்காட்சி..
அப்போது ..கல்லூரி முதல்வர் சந்துரு
சிறப்பு விருந்தினர்..
ஓர் சிறப்பு விளக்கம் அளித்தார்
அவருக்கே உரித்தான பாணியில்..
யோவ்.. ஏதோ.. வந்தோம்
போனோம்னு.. திரியாதீங்கய்யா..
எதாவது வரைங்க வரைங்க…
வரைஞ்சிட்டே இருங்க.
அது கோடு, வட்டம், சதுரம்
எதுவானாலும் சரி..
உங்களுக்கு சுதந்திரம்
இருக்குய்யா. College வா.. வராத..
அதப்பத்தி கவலையில்லை..
ஆனா ஏதாவது பண்ணு.
ஒரு சுதந்திரம் இருக்கு..
யாருக்கும் இல்லாத சுதந்திரம்..
ஒரு காகிதத்தை கசக்கி
அதுல்ல உன் கற்பனை தெரிஞ்சாலும்
அது கலையாயிடும்.. அவ்வளவு
சுதந்திரம் உங்களுக்கு மட்டும்..
ஓவியனுக்கு மட்டும்னார்.
அச்சுதந்திரம் அவர்களை
சுண்டி அரூப ஓவியங்கள் வரைய
ஆட்படுத்தியிருக்கிறது ரசிக்கவும்,
ருசிக்கவும் செய்திருக்கிறது
ஒரு ஓவியனாய்..
அச்சுதந்திரம் எனக்கு பிடித்திருக்கிறது
அச்சுதந்திரம்தான்
ஓவியனை முழமையாக்குகிறது
விடைகண்டு வெளியேறுகிறேன்.. கல்லூரிவிட்டு…
தீர்வு:
- மருத்துவரெனில் மாற்றியமைக்கிறோம்
என் துறையை… என கண்ணிருக்கும்
இடத்தில இதயத்தை இணைக்கலாகாது..
- கவிஞரெனில் வெற்றுக் காகிதம் காட்டி
கவிதையிருக்கிறதென..
கூறிச்செல்லலாகாது..
- என்ஜினியர் கூட கதவின்றி
வீடுகட்டி விடுதலாகாது..
- இப்படி எல்லாத்துறையும்
அதனதன் இயல்புகள் அதனதன்
இயல்புகளுக்கு கட்டப்பட்டே
கட்டுப்பட்டே கடமை செய்கின்றன.
ஆனால் ஓவியனுக்கு இவ்வுலகம்
ஓர் கதவை உடைத்து விட்டிருக்கிறது.
அது..
கண்ணிருக்கும் இடத்தில்
காதும் வரையலாம். காலும் வரையலாம்.
வெறும் canvas-ல் விஷயம்
சொல்லலாம்.
வண்ணம் மட்டுமே பூசி
எண்ணம் சொல்லலாம்.
என்ற சுதந்திர உணர்வை
சுவைக்க கொடுத்திருக்கிறது.
அந்த சுதந்திரக் காற்றை
சுவாசித்தவன்தான் கோடுகளிலும்
கட்டங்களிலும், கலர்களிலும் காவியம்
கண்டான.; ஓவியம் தந்தான.
ஓவியனுக்கான சுதந்திர உணர்வை
உணரும் நிலைதான் ஓவியனின்
உச்ச நிலையாகும்.
அப்போ.. உச்ச
வெளிப்பாடுள்ள ஓவியம் உருப்பெறும்.
(வண்ணம் நிறைந்தது..)
அங்காடித் தெரு-பக்கம் பக்கமாய் பத்தி எழுதி விவரிக்க இது படமில்லை
உடுத்தி மகிழ..
உண்டு ருசிக்க..
கண்டு கழிக்க..
பொழுதை போக்க..ரங்கநாதன் தெருவை மிதித்தவர்கள் நாம்..
அந்த அங்காடித் தெருக்குள்ளே ஆழமாகிக் கிடக்கிறது இன்னும் நிறைய..
மனிதம் செத்தவர்கள்..
மனிதம் போற்றுபவர்கள்..
வாழும் வாழ்க்கை,நம்பிக்கை,அவலம்,ஏமாற்றம்,இயலாமை,உயர்வு,வலி,காதல்
பக்கம் பக்கமாய் பத்தி எழுதி விவரிக்க இது படமில்லை..பலரின் வாழ்க்கை..வாழ்ந்திருக்கிறார்கள்.
வந்து பாருங்கள்..வலி தெரியும்….வாழ்க்கை புரியும்.
நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்..மன்னிக்க உணரவேண்டிய வாழ்க்கை.
என் கலைத்தேடலும் கவின் கலைக்கல்லூரியும் – VI
- கல்லூரி முதலாண்டு
வாவ்…ஆஹா…வார்த்தை வராத
தருணம்…
மனமுழுக்க மகிழ்ச்சி
எனக்காய் எதிர்பார்த்து காத்திருந்தது போல் 150வது வயது…என் கல்லூரிக்கு…
நான் கால் பதித்த வருடம்.
கலர், கலர் கனவுகளோடு வண்ணத்துப் பூச்சியின் இறக்கையை இரவல் வாங்கி
பறக்கலானேன்
எம் கல்லூரியில்..
உன்னத ஓவியம் உணரப்போகிறோம்…
காவிய நாயகன் ஆகப்போகிறோம்… இக்கல்லூரியில்
கால்பதித்தவனெல்லாம் எனக்கு அப்போ…
காவிய நாயகன்.. சாதனை நாயகன் என்பதாய்
பூரிப்பு…
கேட்டது VISCOM…கிடைத்தது PAINTING
கற்கப்போனேன்…
கிடைக்கும் வரைதான் அதற்கு பெருமை…
கிடைத்தப்பின் நான் உணரவில்லை அதன்
அருமை…
அப்போ… வெளியூர் பேருந்து
நிலையம்… பாரிமுனையில்…
சேலம் பேருந்தை பார்த்துவிட்டால்
செய்வதறியாது சென்ட்டிமெண்டில்
ஊர் போவேன்…
கல்லூரி போகாமல் முழு ஆண்டில்
முக்கால் ஆண்டு என் ஊர் வாசம்…ஊர் வசம்..
ஆனால் அப்பப்போ… கல்லூரி
வந்தால் கேட்பது… என்ன CLASS எடுத்தார்களா
என்று..
Portrait, Full Figure, Still life, Textile Design – என்று Technical words மட்டுமே
எனக்கு தெரிய வரும்.
இருந்தும் இருக்கும் நாட்களில்
கிடைத்திட்ட நேரத்தில்…
அப்பப்போ சில
கிறுக்கல்கள்
இப்படியாய்…24 நாட்களோ என்னவோதான்
நான் சென்ற முதலாண்டு நாட்கள்…
ஒரு மாதம் கூட ஒழுங்காய் இல்லை..
முழு ஆண்டை முடித்துவிட்ட திருப்தி.
(நிறங்கள் நீளும்..)













