Posts filed under ‘விமர்சனங்கள்’

ஆரண்ய காண்டம் – புதிய அனுபவம்!

அமைதியாக ஆரம்பிக்கிறது படம் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல்..ஆரம்பக்காட்சியே கிழவன் ஜாக்கி செராப் இளம் மனைவியுடன் வலுக்கட்டாயமாக கிளுகிளுப்பில் ஈடுபடுகிறார்..உடலுறவில் தன் இயலாமையை வெளிப்படுத்த முடியாமல் இளம்மனைவியை அடித்து ஆக்ரோசம் காட்டுகிறார்..அடுத்து வெளியே வந்து அங்கு பேசிக்கொண்டிருக்கும் கும்பலிடம் சத்தம் போட்டு உள்ளே செல்லும் போது அந்த கிழவனின் பின்புலம் நமக்கு புரிய வருகிறது.அவர் குழுத் தலைவன்,தாதா என்பது.இன்னொரு தாதா கஜேந்திரன் குழுவுக்கு வந்த போதை பொருளை, ஜாக்கி செராப் குழு ,இடை தரகரிடம் இடைமறித்து வாங்க முயற்சிக்கும் போது,ஜாக்கியின் அடியாள் சம்பத்துக்கு வருகிறது கண்டம்,சம்பத் செய்த காரியத்தால் சம்பத் மனைவிக்கு வருகிறது கண்டம்,போதை பொருள் பறிபோகிறது.அது ஒரு அப்பா, மகனிடம் சிக்கி ,அந்த அப்பா தாதா கும்பலிடம் சிக்க,அங்கே அவனுக்கு வருகிறது கண்டம்,ரவிக்ரிஷ்ணாவை தாதா கிழவனின் இளம் மனைவி காதலிக்க அதனால் அவனுக்கு வருகிது கண்டம் ,இப்படி பல்வேறு நிழலுலக மனிதர்களின் கண்டங்களை சுமந்து அடுத்தடுத்த பரிணாமத்தில் பயணிக்கிறது இந்த காண்டம்.

எல்லா கேரக்டர்களும் நன்றாக செய்திருக்கிறார்கள்.கேமராவே கதாநாயகன்,காட்சி கலரிலிருந்து ,கேமரா கோணம் வரை ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு அழகு..ரசித்து என்பதை விட ருசித்து அனுபவித்து வேலை செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.இசை படத்தின் இன்னொரு சிறப்பம்சம்.இயக்குனரின் புதிய பாணியிலான முயற்சி பாராட்டுக்குரியது.போஸ்டர் முதல் படம் வரை அனைத்துலும் வித்தியாசம் காட்ட முயற்சித்திருக்கிறார்.என்றைக்கோ பார்த்த ட்ரைலரும்,அந்த போஸ்டருமே என்னை படம் பார்க்க தூண்டிய முதல் காரணி.பாடல் இல்லாத இன்னொரு சினிமா.சில இடங்களில் வசனங்கள் நச்..எந்த ஆம்பளையும் சப்ப கிடையாது..எல்லா ஆம்பளையுமே சப்பதான் என்று எதிர்பாராத நேரத்தில் கதாநாயகி பேசுவது..படத்தில் வரும் சிறுவன் பல இடங்களில் பேசும் வசனங்கள் நம்மை ரசிக்க வைக்கின்றன..

ஆனால் சில இடங்களில் வசனம் இழுவை..ரொம்ப மொக்க போடாதீங்க என சொல்ல வைக்கிறது..அப்புறம் கெட்ட வார்த்தைகள்..நிலைநிற்கும் கேமெரா கோணம் சில இடங்களில் ரசிக்கவும் ,பல இடங்களில் அலுப்படையவும் வைக்கிறது..கதைக்களம் இங்கே சென்னையில் நடப்பதாக காட்டினாலும்,சென்னை வாசம் காட்சியில் இருப்பதாக உணர இயலவில்லை.மண்ணோடு ஒட்டவில்லை.நிலைநிற்கும் கேமெரா கோணம்,நீண்ட வசனங்கள் சில காட்சிகளில் வைப்பதை தவிர்த்திருந்தால் காட்சியின் வேகம் கூடியிருக்கும்.படம் பார்க்கலாம்..ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும்..

ஜூன் 13, 2011 at 8:26 மு.பகல் 2 பின்னூட்டங்கள்

வானம்-சில மேகமூட்டங்கள்!

ஐந்து தரப்பு மனிதர்களின் வாழ்வியல்,அவர்களின் பின்புலம்,எதிர்பார்ப்பு,ஏக்கம் என வானம் என்ற குடையின் கீழுள்ள மேகக்கூட்டங்களைப் போல விரிகிறது கதை.இசைத்துறையில்,சாதிக்க வேண்டும் என்கிற வெறியுள்ள இளைஞனாக பரத்.அவரை சுற்றி ஓர் கூட்டம்.பணக்காரப் பெண்ணை காதல் செய்து தாமும் பணக்காரனாகி விட வேண்டும் என்கிற வேட்கையில் கேபிள் ராஜாவாக யூத் சூப்பர் ஸ்டார் STR (அதாங்க நம்ம சிம்பு).பெயர் காரணத்திற்க்காக ஒரே ஒரு சீனில் மட்டும் கேபிள் ராஜாவாகி இருக்கிறார்.விரக பசி எடுத்தவர்களுக்கு உடற்பசி தீர்க்கும் விலைமாது வேடத்தில் அனுஷ்கா.தம் பையனை படிக்க வைக்க,வாங்கிய கடனை தீர்க்க கிட்னி விற்கும் அபலை அம்மாவாக சரண்யா.தம்பியை தேடித் திரியும் அண்ணனாக முஸ்லிம் கதாப் பாத்திரத்தில் பிரகாஷ்ராஜ்.இடைவேளையில் பாதிப்பு என்கிற ஒற்றை நேர்க்கோட்டில் பயணிக்கிறது ஐவரின் வாழ்க்கை பயணமும்.

முடிவில் மனிதம் எப்படி எல்லோராலும் உணரப்படுகிறது என்பதே கதை..

தெய்வம் வாழ்வது எங்கே?
தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில்…

என்ற எண்ணத்தை நோக்கிய பயணம்.

படம் ஆரம்பத்தில் அலுப்பாய் தெரிந்தாலும் போக போக உணர்வுகளில் ஊடுருவத் தொடங்குகிறது.வசனங்கள் பல இடங்களில் நாசூக்காய் சமுதாயத்தைய்ம்,சாமியையும் சாடுகிறது.அது ரசிக்க வைக்கிறது, கைதட்டல் வாங்குகிறது.டைட்டில் STR எழுத்து பில்ட் அப்போடு சரி.படத்தில் ஓவர் சீன் போடுற வேலை இல்லை.STR இன்றைய சினிமாவை புரிந்து கொண்டார் போலும்.அனைவரும் அவரவருக்கு கொடுக்கப் பட்ட வேலையை ஒழுங்காக செய்திருக்கிறார்கள்.அவருக்கே உரிய பாணியில் அனைவரையும் கலாய்த்து கலை கட்டுகிறார் சந்தானம்.நல்லக்கருத்தை சொல்ல வந்த இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும்.ஒளிப்பதிவு  அருமை.அனுஷ்காவின் அழகில் மனதை பறிக்கொடுத்தே ஆக வேண்டும்.படத்தில்,பாடல்கள் இடைச்சொருகலாய்  தெரிந்தாலும் யுவன் கலக்கி இருக்கிறார்.

வானம்-காலையில் மஞ்சளாகவும்,மதியம் நீலமாகவும்,மாலை செவ்வானமாகவும் மாறி மாறி காட்சியளிப்பது போன்று படத்தை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருந்தாலும் வானம் எப்போதும்  நம்மை ரசிக்க வைக்கும்!இந்த படமும் அப்படித்தான்!

மே 2, 2011 at 10:39 மு.பகல் 3 பின்னூட்டங்கள்

தூங்கா நகரம்-நம்மை தூங்க வைக்கிற ரகமில்லை!

பிரமாண்டடமான அரண்மைனைப் போன்ற அந்த பழைய காலத்து பங்களாவில் கீழிருந்து மேல்நோக்கி கேமரா நகர்ந்து அதன் உச்சத்தை எட்டி ,உள்ளே புகுந்து பங்களாவின் இண்டு இடுக்குகளை உள்வாங்கி உள்நுழைந்து அறைகளின் அனைத்துப் பக்கங்களிலும் ஊடுருவி,வழிநெடுகே பயணித்து வீட்டை விட்டு வெளியே வாசல் வழி வருகையில் மழை பெய்யத் துவங்கி இருக்கிறது,மூவரின் கால்கள் தண்ணீரில் ஊடுருவ ,சாக்குபோர்த்திய உருவங்கள் கையில் டார்ச் லைட்டுடன் பயணிக்க,அந்த இரவின் வெளிச்சத்தில் நம்மை ஆரம்பமே மிரள வைக்கிறது.இப்படித்தான் தொடராய் பதிவு செய்திருக்கிறது காமெரா.. திகில் படமோ என்கிற மனநிலையை அந்த லைட்டிங் செய்கிறது.அப்புறம்தான் ஆரம்பிக்கிறது நாலு நண்பர்களின் கடந்தகால வாழ்க்கை ,வடிவேலுவின் வாய்ஸ் உடன்.

மதுரை மீனாசியம்மன் கோவில்,தூங்கா நகரத்தின் இரவு சாப்பாடு,அழகர் கோயில் திருவிழா என அமர்க்களமான ஆரம்பத்தில் திரை முழுக்க வியாபித்திருக்கும் மனித தலைகள் ,படத்தின் தலைப்பு இவையெல்லாம் ஒரு முழுமையான மதுரையை பார்க்கப் போகிற எண்ணத்தை நம்முள் விதைத்துப் போகின்றன.

ஒருத்தன் பயந்தான்கொள்ளி எலெக்ட்ரிசியன் ,இன்னொருவன் காதலில் அலையும் ஊமை,அடுத்தவன் வீடியோ எடுக்கிறவன்,மற்றவன் மின்சார இடுகாடு பராமரிப்பாளன், இப்படியாய் இருப்பவர்களுக்குள் வைகை பாரில் குடிக்குமிடத்திலிருந்து குடிகொள்கிறது நட்பு.

தெருவோர த்ரிசாவாக ஏரியாவிலும் ,டிவி யில் ராதா என்கிற அறிவிப்பாளராக அஞ்சலி.களவாணி(அஞ்சலி) ராதா ஆனதும்,தவிடன் (விமல்)கண்ணன் ஆனதிலிருந்தும் அவர்களுக்கான காதல் ஆரம்பம்… பிளாஷ் பேக்.

வில்லனின் மகனாக வருபவன் ,துணிக்கடை வைத்திருக்கும் நண்பன் உதவியுடன் ,பெண்களின் ஆடை மாற்றும் படத்தை தன் மொபைல் கேமராவில் பதிவு செய்து..அதை அந்த குறிப்பிட்ட பெண்களுக்கு MMS அனுப்பி அவர்களை அனுபவிக்கப் பார்க்கிறான்.இந்நிலையில் பாதிக்கப் பட்ட பெண் விபத்தாகிறாள்.

அதேபோல் இன்னொரு பொண்ணுக்கு பொறி வைக்கையில் ,எலிக்கு வைத்தப் பொறியில் புலி மாட்டினால் என்னாகும்..அப்படித்தான் ஆகிப் போகிறது நண்பர்களின் கதை.பொறி தவறி நாயகனிடம் போய்,வில்லன் மகனுடன் சண்டையிட்டு ,சிக்கலில் நண்பர்களும்..இப்போ நண்பர்களுக்குள்ளேயே மரண பயத்தை உண்டு செய்து நாயகனை முடிக்க வில்லன் எப்படி விவகாரம் பண்ணுகிறான்..விவகாரத்தில் யார் ,யார் எப்படி வில்லத்தனம் செய்கிறார்கள்..சிக்கல் எங்கே சிக்குண்டு போகிறது என்பதுதான் கதை.

கதையில் சில இடங்களில் தொய்வு ஏற்ப்பட்டாலும் விறுவிறுப்பாகத்தான் போகிறது.நடிகர்களும்,ஏனைய அறிமுகங்களும்,இயக்குனரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள்.கேமராகோணம் மிக அருமை.இயல்பாக போன கதை கிளைமாக்சில் சினிமாப் பூச்சானது நம்மை கொஞ்சம் சலிப்பூட்டச் செய்கிறது .

நாம் எதிர்ப் பார்த்த முழுமையான மதுரை மேப்பில் மட்டுமே இருந்தது.படத்தில் இல்லை என்பது கொஞ்சம் ஏமாற்றமே.மற்றபடி படம் பார்க்கலாம் ரகம்!

தூங்கா நகரம் நம்மை தூங்க வைக்கிற ரகமில்லை.!

பெப்ரவரி 6, 2011 at 1:45 பிற்பகல் மறுமொழியவும்

ஆடுகளம் பாத்து ஆச வந்துடுச்சி!

படம் வந்தும்,விமர்சனங்கள் படித்தும் பல நாட்கள் கழித்து சமீபத்தில்தான் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.படம்,காட்சியமைப்புகள் ,காதல் காட்சிகள் எப்படியோ… அதையெல்லாம் கடந்து தனுசின் ஆடுகளத்தில் என்னைக் கவர்ந்தது அவரின் ஆட்டக் களம்தான்.காதல் ஓகே ஆகுற மாதிரி தெரிஞ்சவுடன், அந்த லுங்கியோட ஒரு குத்து போடுவார் பாருங்க..அலட்டிக்காம..அம்சமா..லுங்கிய தூக்கி மூஞ்ச போத்திகிட்டு..அந்தக் குத்து போதும்ங்க..நான் ரொம்ப ரசித்த ஆட்டம் அது.நாலு ஸ்டெப் னாலும் நறுக்குன்னு..சும்மா நச்சின்னு பண்ணிருக்கார்.அந்த குத்தாட்டதுக்கே உள்ள பலம்,அழகு,வசீகரம் அந்த ஆட்டத்தில்.என்னதான் பார்முலா ஆட்டமெல்லாம் இருந்தாலும் குத்தாட்டத்துக்கு முன்னாடி எல்லாமே வெத்தாட்டம் என்பதை நிரூபிக்கும்படி.

அந்த ஆட்டம் பார்க்கும்போது தான் அந்த ஆசை உள்ளூற வந்து ,என்னில் ஒட்டிக்கொண்டது.இப்போதெல்லாம் சொந்த ஊருக்கு கிராமத்துக்கு போனால் கூட ஒரு சார்ட்ஸ் (அரைக்கால் சட்டை)பையில் வைத்து எடுத்து செல்வது எனக்கு வாடிக்கையாகிவிட்டது.ஏனோ லுங்கி என்னில் இருந்து அன்னியப்பட்டதாய் ஆகி இருந்தது.ஆனால் லுங்கி கட்டுவதில் உள்ள சுவாரசியம் வேறு..நல்ல காற்றோட்டம்..ஒரு ப்ரீயான பீலிங் இருக்கும்..லுங்கி கட்டுக்கு ஏத்த ஆளு கெட்டப்பையும் மாத்தும்.தூக்கி கட்டுனா ஒன்னு.ஒரு மாதிரி தூக்கி நடுவுல விட்டு கட்டும் போது பொறுக்கி மாதிரி ன்னு ஒரு மனநிலையை உருவாக்கும்.அதுல நிறைய கெட் அப் இருக்குங்கோ! ஏனோ அப்பப்போ அவிழ்வது தான் கொஞ்சம் அயர்ச்சியை உண்டு பண்ணும்.சார்ட்ஸ் அந்த விசயத்துல பிரச்சினை இல்ல..மாட்டிக்கிட்டா அவ்ளோதான் அவிழாது என்கிற மனநிலை..அதுதான் நகரம் வந்ததிலிருந்து சார்ட்ஸ் கு மாறியிருந்தேன்.

ஆனாலும் ஆடுகள தனுசின் ஆட்டமோ, அப்படியே லுங்கியக் கட்டிக்கிட்டு ஒரு குத்தாட்டம் போடணும்கிற ஆசைய எனக்குள்ள உண்டு பண்ணிடுச்சி!

பெப்ரவரி 4, 2011 at 12:34 பிற்பகல் 6 பின்னூட்டங்கள்

காவலன்-கவலையில்லாம கண்டிப்பா பார்க்கலாம்

இந்தமுறை பொங்கலுக்கு ஊருக்கு போகும் போது ஏதேனும் ஓர் திரைப்படத்தை ஊரிலேயே பார்த்து விட வேண்டியது என்ற தீர்மானத்துடன் தான் ஊருக்கு சென்றிருந்தேன்.அதற்கும் காரணம் இருக்கிறது.கிட்டத்தட்ட சென்னை வருவதற்கு முன், பத்து ஆண்டு காலம் கடந்திருக்கலாம் ,உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் திரைப்படத்தை ஆத்தூர் NS திரையரங்கில் பாக்ஸ் டிக்கெட்டில் பார்த்ததாக ஞாபகம்.நான் ஓவியக்கலூரி சேருவதற்கான ஆயத்தத்தில் இருந்தபோது நானும் என் சித்தப்பாவும் படம் பார்த்து விட்டு சென்னைக்கு பயணம் மேற்கொண்டதாய் நினைவு.அதற்குப் பின் என் ஊரில் படம் பார்க்கும் வாய்ப்பு இல்லாமலே ஆகி விட்டது.ஓரிரு நாட்கள் விடுமுறையில் ஊருக்கு செல்வதால் படம் பார்ப்பதற்கான கால அவகாசம் அதற்குப் பின்னும் இல்லை.நான் எண்ணியது போலவே இந்தமுறை காவலன் திரைப்படத்தை அதே திரையரங்கில் பாக்ஸ் டிக்கெட்டில் பார்த்து விட்டேன்.அன்று டிக்கெட் விலை 15 ரூபாய்..இன்று 50 ரூபாய்..பத்து ஆண்டுகளுக்கு முன் நான் பார்த்தப் படத்தில் ரோஜா கதாநாயகி,இன்று காவலனில் அதே ரோஜா அம்மா.வயது மாற்றம் அவரை மட்டுமல்ல என் எண்ணங்களிலும் கிழடு தட்டியிருந்தது.அன்று என் அருகாமையில் படம் பார்த்துக் கொண்டிருந்த சித்தப்பா.. இன்றில்லை.எத்தனை மாற்றங்கள்.காலத்தில் மட்டுமல்ல..விஜய்யின் காவலன் திரைப் படத்திலும்.சில ஆண்டுகளாக அதிரடியாக படம் கொடுத்து ,நாம் என்ன செய்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றிருந்த விஜய் காவலனில் இல்லை.பத்து ஆண்டுகளுக்கு முன் பவ்யமாய் காதல் செய்த அதே அடக்கமான விஜய்.காலமாற்றம் அவர் எண்ணத்தையும் பக்குவப் படுத்தியிருக்கிறது போலும். ஒரு டைரக்டர் ஹீரோவாக மாறியிருப்பது தெளிவாகிறது.படம் சலிப்பற்று போகிறது.என்ன ஒன்று..நான் ஏற்கனவே மலையாளத்தில் பாடி காட் படத்தை பார்த்து விட்டதால் திலிப்போடு ஒப்பிடும்போது விஜய் நடிப்பு கொஞ்சம் சலிப்பை தந்தது.ஆனாலும் முயற்சித்து நன்றாக பாராட்டும்படி செய்திருக்கிறார்,. மலையாளத்தில் லாஜிக்காக தெரிந்த நிறையக் காட்சிகள் தமிழில் லாஜிக் மிஸ்ஸிங்.. பரவாயில்லை..பொறுத்தருளும்படி தான் இருக்கிறது.சொந்தக் கதையை அதிகம் எழுதி விட்டதால் , கடைசி வரை தெளிவாக விமர்சனம் எழுத எண்ணியும் எழுத இயலாத நிலையாகி விட்டது எனக்கு..என்னையும் நீங்கள் பொறுத்தருல்வீராக..

கவலையில்லாம கண்டிப்பா பார்க்கலாம்.. பன்ச் டையலாக் இல்லாத, ஒரு மாறுப்பட்ட விஜய் படத்தை.

ஜனவரி 19, 2011 at 3:58 பிற்பகல் 4 பின்னூட்டங்கள்

Older Posts




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 91 other followers

ஆக்கங்கள்

அண்மைய இடுகைகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at http://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 137,572 hits

Follow

Get every new post delivered to your Inbox.

Join 91 other followers