Posts filed under ‘என் கலைத்தேடலும் கவின் கலைக்கல்லூரியும்’
என் கலைத்தேடலும் கவின் கலைக்கல்லூரியும் –XII
முதுநிலை இரண்டாமாண்டு:
முதுநிலை இரண்டாமாண்டு இதுதான்
என் கல்லூரி பயணத்தின் இறுதியாண்டும்
கூட.
சூசன் மேடம்
என் கல்லூரி வாழ்க்கையில்
மறக்க இயலாத ஆசிரியை.
நாம் அறியவும், தெளியவும்
அழகாக பயிற்றுவிப்பார்.
கலை வரலாறுகளை கரைத்து
குடித்திருப்பார்.
பாடங்களை அவர் பயிற்றுவித்த போது
இஸங்கள் என்றொரு இன்றியமையாத்
தலைப்பு கலைஞர்களின் வரலாறு
அப்பப்பா சொல்லி மாளாது.
எத்தனை இஸங்கள்
சுவையா சுகமா.. சோகமா..
கேள்வியா.. பதிலா.. குமுறலா..
குழந்தைத்தனமா.. கோபமா.. காதலா..
காவியமா.. ரவுடித்தனமா.. ரசனையா…
எண்ணிலடங்கா எத்தனை
விஷயங்கள..இல்லை இஸங்கள்..
என்னுள் எழுந்த கேள்விகளுக்கெல்லாம்
பதிலாய்.
கலைநயமிக்க கிளாசிஸம்
புகழ்பெற்ற கியூபிஸம்;
தாதாயிஸம், ஃப்யூச்சரிஸம்
என அப்பப்பா….
மிரட்டலும் குடியும்
கூத்தும், அழகும், அலட்டலும்
என அக்கால ஓவியர்களின்
உணர்ச்சிகள் தெரியலாயின.
தான் தோன்றித்தனமாய்
அவர்களின் பாங்கு..அவர்கள்
யாருக்கும் கட்டுப்பட்டவர்களாக
இல்லை..தனித்தன்மையை
வெளிக்காட்ட வித்திட்டவர்களாய்
இருந்தனர்.
அவர்களின் மனதில் எழுந்ததை
வரைந்துள்ளார்கள் பார்வையாளனைப்
பார்த்துப் பயப்படவில்லை.
சிலர் தன் வரைதலுக்காய்
பணமின்றி, பசியில் உழன்றபோதும்
இறங்கிவரவில்லை.. அவர்களின்
எண்ணங்களைவிட்டு.
அவர்கள் பாணி என்பது
பரிச்சயத்திற்கு தேவை என்பதை
உணர்ந்தவர்களாயிருந்தனர்.
தாம் அகம் மகிழ்ந்ததை
அனுபவித்ததை அரங்கேற்றி உள்ளனர்
அப்படித்தான்
பிக்காஸோ,போலக் எல்லாம்..
அரூப ஓவியங்கள் (modern art)
அழகியலை கடந்து ஆக்கத்தன்மையை
பதிவு செய்துள்ளனர்.
புரியலானேன் புதுமையை…
அச்சமயத்தில்தான்
ஓர் ஓவியக் கண்காட்சி..
அப்போது ..கல்லூரி முதல்வர் சந்துரு
சிறப்பு விருந்தினர்..
ஓர் சிறப்பு விளக்கம் அளித்தார்
அவருக்கே உரித்தான பாணியில்..
யோவ்.. ஏதோ.. வந்தோம்
போனோம்னு.. திரியாதீங்கய்யா..
எதாவது வரைங்க வரைங்க…
வரைஞ்சிட்டே இருங்க.
அது கோடு, வட்டம், சதுரம்
எதுவானாலும் சரி..
உங்களுக்கு சுதந்திரம்
இருக்குய்யா. College வா.. வராத..
அதப்பத்தி கவலையில்லை..
ஆனா ஏதாவது பண்ணு.
ஒரு சுதந்திரம் இருக்கு..
யாருக்கும் இல்லாத சுதந்திரம்..
ஒரு காகிதத்தை கசக்கி
அதுல்ல உன் கற்பனை தெரிஞ்சாலும்
அது கலையாயிடும்.. அவ்வளவு
சுதந்திரம் உங்களுக்கு மட்டும்..
ஓவியனுக்கு மட்டும்னார்.
அச்சுதந்திரம் அவர்களை
சுண்டி அரூப ஓவியங்கள் வரைய
ஆட்படுத்தியிருக்கிறது ரசிக்கவும்,
ருசிக்கவும் செய்திருக்கிறது
ஒரு ஓவியனாய்..
அச்சுதந்திரம் எனக்கு பிடித்திருக்கிறது
அச்சுதந்திரம்தான்
ஓவியனை முழமையாக்குகிறது
விடைகண்டு வெளியேறுகிறேன்.. கல்லூரிவிட்டு…
தீர்வு:
- மருத்துவரெனில் மாற்றியமைக்கிறோம்
என் துறையை… என கண்ணிருக்கும்
இடத்தில இதயத்தை இணைக்கலாகாது..
- கவிஞரெனில் வெற்றுக் காகிதம் காட்டி
கவிதையிருக்கிறதென..
கூறிச்செல்லலாகாது..
- என்ஜினியர் கூட கதவின்றி
வீடுகட்டி விடுதலாகாது..
- இப்படி எல்லாத்துறையும்
அதனதன் இயல்புகள் அதனதன்
இயல்புகளுக்கு கட்டப்பட்டே
கட்டுப்பட்டே கடமை செய்கின்றன.
ஆனால் ஓவியனுக்கு இவ்வுலகம்
ஓர் கதவை உடைத்து விட்டிருக்கிறது.
அது..
கண்ணிருக்கும் இடத்தில்
காதும் வரையலாம். காலும் வரையலாம்.
வெறும் canvas-ல் விஷயம்
சொல்லலாம்.
வண்ணம் மட்டுமே பூசி
எண்ணம் சொல்லலாம்.
என்ற சுதந்திர உணர்வை
சுவைக்க கொடுத்திருக்கிறது.
அந்த சுதந்திரக் காற்றை
சுவாசித்தவன்தான் கோடுகளிலும்
கட்டங்களிலும், கலர்களிலும் காவியம்
கண்டான.; ஓவியம் தந்தான.
ஓவியனுக்கான சுதந்திர உணர்வை
உணரும் நிலைதான் ஓவியனின்
உச்ச நிலையாகும்.
அப்போ.. உச்ச
வெளிப்பாடுள்ள ஓவியம் உருப்பெறும்.
(வண்ணம் நிறைந்தது..)
என் கலைத்தேடலும் கவின் கலைக்கல்லூரியும் –XI
முதுநிலை முதலாண்டு
எனக்குள்ளே எட்டிப்பார்த்த
கேள்விக் கணைகளை முட்டிப் பார்க்க
முனைந்து… முடிவாய் வினாவுக்கு
விடைதேடி…
2007-முதுநிலை முதலாண்டில்
கவின்கலைக்கல்லூரியில் கால்
வைக்கிறேன்…மீண்டும்
பிக்காஸோவை தேட..
அவரே என்னைத் தேடி வந்துவிட்டார்
பாடமாக…
பெயிண்ட் பூசினால் ஓவியமா?
கன்னா பின்னா காட்சியமைப்புகள்
கலையா?
திரும்ப திரும்ப இக்கேள்விகள்
எனை திரும்பி பார்த்துக்கொண்டே
இருக்கிறது…
முதலாண்டில்…
Renaisance Period,
அதாவது, மறுபிறப்பு காலம்…
எனக்கும் அதுதான் தேடலின்
மறுமலர்ச்சி காலம்…
லியனார்டோவும், ஆஞ்சலோவும்
மீண்டும் வந்தார்கள்… போனார்கள்…
அப்போது கேட்டேன்;…
கட்டமிட்டவர்களும், வட்டமிட்டவர்களும்
எப்போ வருவார்களென்று…
காத்திரு… காலம் வரும்..
அடுத்தாண்டு அவசியம்
வருவார்கள்… என்றார் எம் ஆசிரியை
ம்… ஓ.கே… அடுத்தாண்டை எதிர்நோக்கினேன்… அவர்களுக்காய….
(கலர் கனவு வரும்..)
என் கலைத்தேடலும் கவின் கலைக்கல்லூரியும் –X
இடைக்காலம்:
2003-ல் வெளியேறி 2007க்கான
இடைவெளி தூரமெல்லாம்
ஓவிய வட்டத்தில் ஊடுருவும்
போதெல்லாம்… ஒரு கேள்வி விழும்…
ABSTRACTION என்றால் என்ன?
கலர் பூசி ஏமாற்றுகிறார்களோ!
என்ற கேள்வி…
ஒவ்வொருவரும் அவரவர் பாணியில்
பதில் தருவர்… புரிந்தமாதிரியிருக்கும்…
ஆனால்…புரியாது…
தெரிவது போலிருக்கும்…ஆனால்
தெரியாது…
உணராமல் நாம் என்ன கிழித்தோம்
நாம் இன்னும் உச்சநிலையை அடையவில்லையோ…
அவரவர் ஏதேதோ சொல்கிறார்கள்…
கேள்வி கேட்டு கேட்டு கிறுக்குப்
பிடிக்காத குறை…
(நிறம் நீடிக்கும்…)
என் கலைத்தேடலும் கவின் கலைக்கல்லூரியும் –IX
நான்காமாண்டு
கலையை கற்க முயன்று
கல்லூரி நுழைந்தது…
முதலில் உணர்… அப்புறம்
கற்றுக்கொள்…என்பதாய் சொன்னது
என் மனசாட்சி…
ஏனெனில்..
எதையெல்லாம் ஓவியம்
என்றிருந்தேனோ…அதுமட்டுமல்ல
ஓவியம் என்பதை உணரவே எனக்கு
மூன்றாண்டு முடிந்து.. நாண்காமாண்டும்
தேவைப்படுகிறது…
இண்டர்நெட் வாசம் எனக்கில்லை
அன்று…
புத்தக புதையலை தேடுகிறேன்.
Rembrant-என்னை ஆட்கொண்டு
விட்டார்…
கல்லூரி வருவதற்கு முன் நானறிந்த
உலக ஓவியன் என்றால்…
டாவின்சி மட்டுமே..
எங்கள் தாத்தா விட்டு
மண்சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும்,
மோனோலிசாவால் அவர் அறிமுகம்…
மோனோலிசாவை காட்டி
யாரிது…?என்றபோதெல்லாம்,
என் சித்தப்பாக்கள் சொல்வது..
உலகப் புகழ் ஓவியம்…
எப்பக்கம் நின்று பார்த்தாலும்
உம்மை பார்க்கும்…
நீ எந்த மனநிலையிலிருக்கிறாயோ
அதுவாய் தெரியும் என்பார்…
சிரிக்கிறாள்… என நினைத்துப்பார்
அவ்வோவியம்.. சிரிக்கும்… அழுகிறாள்
என எண்ணினால் அது அழும்…
-என்றெல்லாம் யாரோ கதைகட்டிகளின்
கதைகளை எமக்கு சொன்னார்கள்.
நானும் பார்ப்பேன்…
ஆமாம்…உண்மைதான் எங்கு நின்று
பார்த்தாலும் எம்மைப் பார்க்கிறது…
சிரித்தால் சிரிக்கிறது… அழுவதால்
அழுகிறதே என்று…
எம் கல்லூரி முகவரிதான்
அதெல்லாம் கட்டுக்கதை என்பதை
தொட்டுச் சொன்னது…
ம்… மன்னிக்கவும்… Rembrant
பற்றி சொல்ல வந்து… மலரும்
நினைவுகளில் சற்று மனம் மயங்கி
விட்டேன்…
படங்களில் வரும் Flash Back
போல…
Rembrant-ன் இருட்டின்
வெளிச்சத்தில் வரைய்பபட்ட ஓவியம்
எனை ஈர்த்தது… கட்டுண்டு எனை
இழுத்தது.
ரசித்தேன்..அவரின் ரசிகனானேன்.
அழகியலை ருசித்தேன்.
மைக்கேல் ஆஞ்சலோவின் சிற்பங்களில்
மனதை பறிகொடுத்தேன்..
அவர் சிறபம் செதுக்கவில்லை..
சிற்பம் அவரை செதுக்கியிருக்கிறது..
அவ்வளவு அலாதி… ஆனந்தம்…
இப்படி எதார்த்தநிலை என்னுள்
இயங்கி கொண்டிருக்கையில்…
அப்பப்போ… பிக்காஸோ,
போலக் எனும் பெயர்கள் என் செவியில்
விழும்…
ஆமாம்.. அவர்கள் அப்படி என்ன
செய்தார்கள் என ஆராயலானேன்.
வெறுப்பாய் வந்தது…
கிறுக்கியிருக்கிறான்…. இது ஓவியமா?
கோடுகள், கட்டங்கள், கருப்பு, வெள்ளை இதில் என்ன
சொல்ல வந்திருக்கிறான்..
இவன் ஏன் உலகப்புகழ் பெற்றவன்?
முட்டாள்கள் ஏற்றுக்கொண்டார்களா?
இல்லை… எனக்கு இன்னும்
விளங்கவில்லையா?
கலர் பூசி ஏமாற்றியிருக்கிறார்களா?
காதில் பூ சுற்றுகிறார்களா?
விமர்சனங்களால் வளர்ந்தவர்களா?
வில்லங்கம் செய்தார்களா?
-என ஓராயிரம் கேள்விகள்
என்னுள்.
அதை கேட்டு… ஓடுகிறேன்.. தேடுகிறேன்
தேடுகிறேன்..
தேய்ந்து போனது நான்காண்டு..
விடையின்றி வெளிவருகிறேன்
கல்லூரிவிட்டு..
(நிறம் நீளும்..)
என் கலைத்தேடலும் கவின் கலைக்கல்லூரியும் – VIII
மூன்றாமாண்டு…
புதிதாய், மீசை முளைத்தபோது… முறுக்க தோன்றுமே…
அதுபோலொரு முறுக்கம்…
இக்கல்லூரிக்கு…நான் சீனியர் என்கிற
எகத்தாளம்…. திமிர் என்னுள்ளும் வந்தது..
இது பற்றி சொல்ல வேண்டியதில்லை…
இக்கல்லூரி படிப்பவனுக்கு இயல்பாய் இருப்பதுதான்.
நான் Creator என்கிற இறுமாப்பு…
அதுவும் மூன்றாமாண்டில் அது
முழுமையுறும்…
ஆசானை கலாய்ப்பது… சீனியரை
சதாய்ப்பது… என்பதாய் சீற்றம் அடையும்.
வகுப்பறையை நான் தேடிய நாட்கள்
மறந்து… வகுப்பறை எப்போதாவது
இந்தப்பக்கம் வந்து போடா… என என்னை
தேடலானது…
மரத்தடியும், கல்லூரி குட்டி சுவருமே
எனை சிறை கொண்டது…வெட்டிப் பயலுக்கு
குட்டிசுவர் என்பார்… எங்களுக்கு அதுதான் வெற்றிசுவர்…
அதுதான் ராக்கிங் எனும் பெயரில் மொக்கை போடுவதற்கும்
ஹாட் ஸ்பாட்… எனக்கும்.. என் சகாக்களுக்கும்.
அப்போதான்… OUTDOOR STUDY…
என்னுள் INDOOR STUDY-யாய் உட்புகுகிறது.
எம் சிறுவயதில் கற்றேனே
அரசுப்பள்ளி மரத்தடி கல்வி…
அதேதான்… அப்போ கஷ்டப்பட்டு
உட்காருவோம்… இப்போ இஷ்டப்பட்டு
அம்மரத்தடியில் ஆசான் இருப்பார்
இங்கே… பென்சிலும், பேப்பரும்தான்…
எங்கள் கல்லூரி சுதந்திரத்தை
எங்களுக்கு சொல்லி கொடுக்கலானது…
வகுப்பறை வருவாயோ… மாட்டாயோ..
வரை.. வரை.. வரைந்துகொண்டேயிரு
உனக்கான சுதந்திரம்… உணர்.. வரை
இது வாத்தியாரின் வார்த்தைகள்
அது எனக்கு பிடித்திருந்தது….
இயல்பாய் பட்டது..
மரம்… செடி… கொடி என அவுட்டோர் அனைத்தும் வரைந்தேன்… கசக்கினேன்..
கிழித்தேன்..
வரைந்தேன்… கிழித்தேன்…
என்னால்… வரையப்படும்… கசக்கப்படும்…
எறியப்படும்.. இப்படியாய் என் கிறுக்கல்கள்…
நான் முன்பு ரசித்து, ருசிதததெல்லாம்
எமக்கு பிடிக்கவில்லை…
இது பத்தாது… இன்னும் STROKES
BOLD ஆகவில்லை… என என் மனம் எனக்கு
சொல்லியது…
இம்முறையும் சுற்றுலா..
இது.. NORTH INDIA
MIDDLE INDIA…செல்ல வேண்டியது…
குஜராத் கலவரத்தால் NORTH INDIA
முந்திக் கொண்டது..
அப்பப்பா… அதிசயங்கள்…
காதலின் பிரமாண்டம் தாஜ்மஹால்
காமக்கலைக்கூடம் – கஜீராஹோ
சிவப்பு சிகரம் – செங்கோட்டை
காவி நகரம் – காசி
என் கண்களுக்கு விருந்தாய்
கற்றுக் கொடுத்தது நிறைய…
இருந்தும்…
அறிய இருந்ததும்… ஆர்வம்
மிகுந்ததுமாய்….
கல்கத்தா..
ட்ராம் பயணம்.. ஹவுரா
ப்ரிட்ஜ் ன் மேற்கு வங்காள
பாகப்பிரிவினை..
இவையனைத்தும் பார்வையை
இழுத்தாலும்..
அந்த டீன் ஏஜ் வயதின்
ஆர்வமிகுதி..அந்த இடம்தான்..
சோனாகாச்சி..சுற்றிப்பார்த்தோம்
இந்தியாவின் சோகம் எனலாம்.. ஆனால்
அவர்கள் முகத்திலில்லை..
விபச்சாரிகள் உலகம்…மன்னிக்க..
விருந்தாளிகளுக்கு உபசாரிகள் உலகம்..
இப்படி கல்வி சுற்றுலா
கற்றுக்கொடுத்தது நிறைய..
தியானம் செய்து முக்தியடைந்தவனைப்போல….
முற்றிலும் அறிந்த
மூன்றாமாண்டு…
(மீண்டும்..நான்காம் ஆண்டில் சந்திப்போம்..)