Posts filed under ‘என் கலைத்தேடலும் கவின் கலைக்கல்லூரியும்’

என் கலைத்தேடலும் கவின் கலைக்கல்லூரியும் – II

 • எத்தனைமுறை… என் வீட்டின்

வெள்ளைச் சுவர்கள் என் கரிக்கட்டையின்

கற்பழிப்பில் கற்பிழந்திருக்கின்றன.

ஆந்த கரிக்கட்டையின் கற்ப்பழிப்பில்தான்

என்னுள் இக்கலைஞன் கருவுற்றிருக்க வேண்டும்.

 • மாட்டுப் பொங்கலென்றால்-மட்டற்ற

மகிழ்ச்சி-கொம்புக்கு பெயிண்ட் அடிப்பதில்

கலர் பூசுவதில் அத்தனை கவணப்பட்டிருக்கிறேன்.

இப்படி ஆடு, மாடென்று அத்தனை

இயற்கையும் எனைக் கலைஞனாக்க கவனமெடுத்த

போதிலும்…

 • என் முன்மாதிரி (ரோல் மாடல்)

என் கலைஞன் கதாபாத்திரத்தின் முக்கிய

உச்சநட்சத்திரம்-என் தந்தை

எல்லோரும் தந்தையை அப்பா என்பார்கள்

எனக்கோ… என் தந்தை ஐயாவாகவே

அறிமுகம்…

அதனாலயோ. என்னவோ… எனக்கு

ஆசானாகவும் அவர்

அறிவுக்கு தந்தை என்பார்- என்

ஆளுமைக்கும் அவரே!

அவரின் விடுமுறைக்காலங்கள் அனைத்தும்

என்னுள் ஓவியன் உருப்பெறவே

உரமாகியிருக்கின்றன.

 • மேக நகர்வுகளில்… அத்தனை ஓவியங்களை

பரிசளித்திருக்கிறார்.

அந்த மேகம் பார்-அதனில்

என்ன உருவம் தெரிகிறது என்பார்.

நான் சொல்வேன் மயிலென்று

காற்றுவாக்கில் மயில் குயிலாகியிருக்கும்…

அப்போ…நானறியவில்லை. அனிமேஷனுக்கும்

இதுதான் அடித்தளமென்று…

இப்படி…

மேக நகர்வுகளில்…

மின்னல் வெளிச்சத்தில்

அதிகாலை சூரிய பிறப்பில்

மாலை சூரிய ஓய்வில்

வெளிச்சத்தில் விழுந்த நிழல்களில்

மரக்கிளைகளில்

நிலவில் பாட்டி வடை சுட்ட பால்ய நினைவுகளில்.

மாறி, மாறி தெரிந்த தசாவதாரங்களை

தரிசித்துத்தான் இவன் தவப்பயன் அடைந்திருக்க

வேண்டும்.

இவனுள் ஓவியதவம் மோட்சமடைந்திருக்க

வேண்டும்.

 • எனக்கு உருக்கொடுத்ததல்லாமல்

என்னுள் ஓவியனுக்கு,

கரு கொடுத்த பெருமையும்

என் தந்தையையே சாரும்.

 • அப்போ… அவர் துணிக்கடையில்

தொழிலாளி… நன்றாக நினைவிருக்கிறது.

டிபார்ட்மெண்ட் சூட்டிங்… சர்ட்டிங்

என்பார்.

வேட்டிக்கிடையிலும்

ரெடிமேட் சட்டைகளுக்கிடையிலும் வெள்ளை

அட்டை வரும். ஒவ்வொன்றாய் பொறுக்கி

ஒன்றாய் சேர்த்து… எனக்கு கொடுத்து

நான் பெறுகின்ற பெருமகிழ்ச்சியில்

அகமகிழ்ச்சி அடைவார் அவர்.

என்னை பொறுத்தவரை

நான் அப்போது செய்வது கிறுக்கல்… என் தந்தைக்கோ…

பெருமதிப்பு ஓவியம்…

என் கிறுக்கல்களுக்கு அவர் எடுத்த

சிரத்தை அவரை கலைஞனாய் காட்டும்..

கற்பனைத்திறத்தோடு இந்த ஓவியத்தை…

இப்படித்தான் ஒட்ட வேண்டுமென்று வெட்டி

ஒட்டுவார்…

அவரின் கைங்கர்யத்தால் வெறும்

கிறுக்கல், உயிரோவியம் ஆனதை கண்டு

அகமிகழ்ந்திருக்கிறேன்.

(நிறப்பிரிகை வளரும்..)

திசெம்பர் 2, 2009 at 11:11 பிப 2 பின்னூட்டங்கள்

என் கலைத்தேடலும் கவின் கலைக்கல்லூரியும் – I

 • வெள்ளைச் சுவற்றில்

– கரிக்கோடிட்டபோதும்

அடுக்கி வைக்கப்பட்ட பொருட்கள்

என்னால் களைக்கப்பட்டபோதும்

திட்டாதுவிட்டு கலைஞனாய்

எனைக் கருத்தறிந்த என்தாய்க்கு

 • மேக நகர்வுகளில் ஓவியம் சொல்லி

வானவில்லில் வண்ணம் காட்டி

கற்பனைத் திறனை என்னுள் ஊட்டி இக்கலைஞனை

பிரசவித்த என் தகப்பனுக்கும்

 • சிங்கார சென்னை

பூந்தமல்லி நெடுஞ்சாலை

சாலை முற்றத்தில்

ஓர் சோலை

ஓங்கி உயர்ந்து

அமேசான் அளவாய் காடு

உள்ளே இயலா வயதிலும்

இறுமாப்பு கொண்ட கிழட்டு கட்டிடங்கள்

பாமரன் சொல்லில்

பொம்மைக் கல்லூரி

விலாசம் அதற்கு

கலைத்தொழில் கல்லூரி

காவியம் கண்டதால்

கவின்கலைக் கல்லூரி

எனைக் கலைஞனாக்க கவனமெடுத்தமைக்கும்

 • ஆண்டாண்டு காலமாய்

அறிவு தேடலில்

அரட்டை கச்சேரியில்..

அங்கம்; வகிக்கும்

அறை தோழமைக்கும்.

 • ஸ்ரீ…மந்திரச்சொல் மட்டுமல்ல..

நான் சோர்வடைந்த போதெல்லாம்..

என்னில்; சோம்பல் முறித்து.

ஏற்றம தர முனைந்த

உன்னத உறவு.

 • எம் கல்லூரியின்

சாதனை முதல்வர் சந்ரூ

மாணவ முன்னேற்றத்தில்

மகத்தான ஆசான் மனோகரன்

கலை வரலாறு கற்றுவித்து

எம் கண் திறந்த ஆசிரியை

சூசன் மேம்

 • என் தகப்பனின்

கடைசி தமையனாய்

என் ஓவியத்தாகத்துக்கு

ஊற்றாய்

வளர்ச்சிப்பாதையில்

வடிகாலாய்

எனைக் கலைஞனாக்க

கற்பனைக்கண்டே

எமக்காய்

கண்திறந்த கண்ணா

இப்போ-இல்லாது எமைவிட்டு

இறைவனடி சேர்ந்திட்ட

பாசமிகு சித்தப்பா

பாக்கியநாதா

உம் பாதத்தில் சமர்ப்பணம்.

 • காட்டுக்கோட்டை

பெயரைப்போல காடில்லாவிட்டாலும்

அந்த ஊரில் காட்டுக்கொட்டாயில் தான்

எங்கள் வீடு.

காட்டுக்கோட்டைத் தாண்டி கொட்டாயை

தேடுகையில்… குறுக்கேயிருக்கும் கற்களை

விழுங்கி காவல் நிற்கும் கல்லாறு.

பெரியாறுகளை கண்டோர்க்கு அது

ஓடை….

எங்களுக்கோ… அதுதான் ஆறு.

 • எத்தனை நாட்கள்

ஆற்றில் விழுந்து

கண்கள் சிவந்து

நண்டு பிடிக்க

-பொந்தில் கை

மீன்கள் அள்ள

-துண்டு விரித்து

துள்ளும் வயதில் அள்ளும் நினைவுகள்

 • அப்போ…

ஆடு மாடு மேய்ப்பதற்கோ அப்படி

ஆர்வம்.. மாடு சவாரியின் மகிழ்ச்சி.

எத்தனையோ முறை எருமை மாடேறி

எமனாகியிருக்கிறேன் – என் மழலைப் பருவத்தில்

முட்செடிகள் என் கால்களை

பதம் பார்த்ததில்லை… மாறாக முட்களை நான்

மிதித்து பதம் பார்த்திருக்கிறேன்.

அக்காலம் முட்கள் என் கால்களுக்கு

சிவப்பு கம்பளம் விரித்திட்ட காலம்.

காரைப்பழம்… ஆனாப்பழம்… சொத்துகிழா

இவைதான் நானறிந்த அக்கால நாட்டுப் பழங்கள்

மன்னிக்கவும்… எமது காட்டுப் பழங்கள்.

 • உயிர் ஓணான், பிடித்து, கள்ளிப்பால்

கொடுத்து, சித்ரவதை செய்திருக்கிறேன் – என் சிறார் பருவத்தில்.

நானறியவில்லை… அப்போ நாம்

செய்வதும் சிசுக் கொலையென்று.

கள்ளிப்பாலுக்கு கண் எரிந்து அது

ஆடுகையில் – ஓணான் பேயாடுவதாக பெரும்

மகிழ்ச்சி. எருக்கை குச்சொடித்து பேயோட்டிய

பெரும் பருவம்.

 • பள்ளிச்சென்று சிறுநீர் நேரத்தில்

சிறுநீர் கழிக்க சிற்றோடைகள் ;உருவாக்கி

இருக்கிறோம்… ஓடைத்தண்ணீர் வீணாவதாய்

எண்ணி – செடி தேடி நீர்ப்பாய்ச்சி

நீர் சேகரிப்பு திட்டம் செய்தேன்.

செடிகள் செத்து போயிருந்தன.

பின்புணர்ந்தேன் செடியழிப்பு திட்டம் செய்தேனென்று.

சிறுநீர் கழிப்பில்

 • சுவற்றில் எத்தனை சித்திரம்

வரைந்திருக்கிறேன் என் சிறுவன்

பருவத்தில்…

அப்போதுதான் … என்னுள் அந்த

ஓவியன் கண் விழித்திருக்க வேண்டும்.

[வ(எ)ண்ணங்கள் சிதறும்…]

திசெம்பர் 2, 2009 at 11:10 பிப 2 பின்னூட்டங்கள்

Newer Posts
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

 • 200,211 hits

%d bloggers like this: