Posts tagged ‘அரசு’
தண்ணீர்…கண்ணீர்!
பணக்கார பங்களாவில்
அழகுக்காய்
கொட்டுகிறது தண்ணீர்!
அருகாமை குடிசைகளில்
தண்ணீர் வேண்டி
அரசுக்கு மனுபோட்டு
இயலாமையில் மக்கள் கண்ணீர்!
பக்குவப்பட்ட இந்தியனாய் நம்மையும் இணைத்துக் கொண்டோம்!
அழுக்கேறிக்
கொண்டே இருக்கிறது.
துருப்பிடித்த கறை
விரைவாய் பரவுகிறது.
அழுகிய பிணத்தின்
வாடை ஆக்ரமிக்கிறது.
ரத்தம் தோய்ந்த பூமி
சிவப்புக் கம்பளமாகிறது.
பாதைகள் பயன்படுத்தப்படாமல்
பசும் புற்களை மிதித்து நடக்கிறோம்.
கூரியக் கற்களின்
சிராய்ப்புகள் ரசிக்கப்படுகின்றன.
தலைகள் வெட்டப்பட்டு
ஆங்காங்கே வீசப்படுகின்றன.
குப்பையில் வாழவும்
சகிப்பை பெறுகிறோம்.
சாக்கடைகளின் நாற்றம்
நறுமணம் கமழ்கிறது.
ரத்தக் கொதிப்பு
நமக்கு வருவதே இல்லை.
விடியலை விடவும்
இருட்டு விரும்பப்படுகிறது.
பக்குவப்பட்ட இந்தியனாய்
நம்மையும்
இணைத்துக் கொண்டோம்
ஊழலில்!
காலப்பெட்டகத்தில் கனவுகளாய் செல்லாக் காசுகள்..
நண்பர் சொல்கிறார் இன்னொரு நண்பரிடம்..உங்க பையனுக்கு உண்டியல் சேமிப்பு பழக்கம் கற்று தந்திருக்கிறீர்களா?ஆம் என்பதாய் அவர் பதில்..அப்படியாயின் உண்டியலை உடைத்து 25 பைசாவை செலவழிக்கப் பாருங்கள்.25 பைசா ,ஜூன் 30 க்கு பின், செல்லாக் காசாக அரசால் அறிவிக்கப் பட்டிருக்கிறது.இதுதான் நண்பர் அந்த நண்பருக்களித்த அறிவுரை.அதைத் தொடர்ந்துதான் அந்தக் கால காசுகளைப் பற்றிய நினைவு அலசல்கள் பரபரப்பாய் பற்றிக் கொண்டது நண்பர்களிடம்..
ஒரு நண்பர் சொல்கிறார்..5 பைசாவுக்கு அக்காலத்தில் மிட்டாய் வாங்கினேன்..அப்பா பள்ளிக்கு செல்லும் போது பத்து பைசாவை என்னிடம் கொடுத்து நீயும்,தம்பியும் மிட்டாய் வாங்கி சாப்பிடுங்கள் என்பார்!அது ஒரு கனாக்காலம்…என்கிறார் பெருமூச்சோடு!
அடுத்தவர் ஆரம்பிக்கிறார்…அது பத்து பைசாவைப் பற்றிய நினைவு..நினைவிருக்கிறதா உங்களுக்கு ,சரியான வட்டமாக அல்லாமல் பூவின் இதழ் போன்ற வட்டத்தில் அக்கால பத்து பைசா..ரயில் தண்டவாளத்தில் நசுங்க வைத்து ரசித்திருக்கிறேன்.பைசாக்களை பால்பேப்பர் நோட்டில் வைத்து பென்சிலால் தேய்த்து அதன் அச்சு எடுத்திருக்கிறீர்களா..அதெல்லாம் அக்கால விளையாட்டு.மோதிரம் செய்த கதையும் உண்டு என்கிறது அவரின் நினைவலைகள்.
அடுத்தவர் வார்த்தையில் 20 பைசா நிழலாடுகிறது..20 பைசா பற்றி அவர் நினைவு படுத்துகையில் பலரின் நினைவுகளில் அதன் அமைப்பு மறந்து போயிருக்கிறது…அவர் இருபது பைசாவில் சேமியா ஐஸ் வாங்கிய சுவையான நினைவுகளை அசை போடுகிறார்.பைசாவில் h ,m , t தனி தனி காயின்களை ஒன்று சேர்த்து கொடுத்தால் hmt வாட்ச் தருவார்கள் என்று யாரோ கதை கட்டிகளின் கதைகளை ,அக்காலத்தில் நம்பி இருப்பதாகவும் வெம்பி சொல்கிறார்.பைசா வைத்து பைசா கோபுரம் கட்டிய கதையும் இடையில் வந்து போகிறது..
இப்படியாய் நீள்கிறது காணாமல் போன பழைய 50 பைசா,1 ரூபாய் நோட்டு,பளபள சின்ன பத்து பைசா நினைவுகள்,அதனை சுற்றிய கதைகள்..நான் குழந்தையாக இருந்தபோது,என் தாத்தா 1 பைசா,2 பைசா,1 /2 அனா நினைவுகளைப் பற்றி சிலாகித்ததும் என் நினைவிலிருந்து மறையாமல் இன்னும் நிழலாடுகிறது.ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நாட்டின் வளர்ச்சிக்கேற்ப,நாணயங்களின் மதிப்பிற்கேற்ப அவை மாறவே,மறையைவோ செய்கின்றன.அது காலத்தின் கட்டாயம்..இருந்தாலும்…அந்த பழைய பைசாக்களை பார்க்கும் போது அது நம்மில் உண்டாக்கும் சிலிர்ப்பு மாறுவதில்லை.அக்கால காசுகள் இக்காலத்தில் செல்லாக் காசாகலாம்..ஆனால் அதனைப் பற்றிய நினைவுகள் நம்மிடத்தில் எப்போதும் செல்லாமல் போவதில்லை!!இனிமையான நினைவுகளை சேமித்துக் கொண்டே இருக்கின்றன!
பச்சை மை கையெழுத்தும்,பணப்பட்டுவாடாவும்
சமீபத்தில் ஒரு தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தேன்..விண்ணப்ப படிவத்திலும்,விண்ணப்பம் அனுப்ப கேட்டிருந்த சான்றிதழ் களிலும் பச்சை மையினால் கையெழுத்து போடும் அதிகாரமுள்ள அதிகாரியின் சான்றிதழ் சரிபார்ப்பு கையொப்பம் கேட்டிருந்தார்கள்.. சான்றிதழ் சரிபார்ப்பு கையொப்பம் பெறுவதற்காக சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை சென்று அங்கு அரசு மருத்துவர் ஒருவரை அணுக முயற்சித்தபோது உதவியாளர் குறுக்கிட்டு சொல்கிறார்.. கையெழுத்து போட ரூ 50 எடுத்து வச்சுக்கோங்க..மேடம் கு கொடுக்கணும்னு..அப்போதான் கையெழுத்து போடுவாங்கன்னு..ஓகே..நான் மேடம் கிட்ட பேசிக்கிறேன் படிப்புக்கான விண்ணப்பம் தானே.அவர்களுக்கு பச்சை மையினால் கையெழுத்து போடும் அதிகாரம் இருக்கவே இங்கே வருகிறோம்.. இதற்கு போய் பணம் கேட்கிறீர்களே என்றபோது,மருத்துவர், இங்க நிறைய கூட்டம் இருக்கு..எனக்கு இப்போ கையெழுத்து போட நேரமில்ல..வேற டாக்டர் அ பாருங்க என்று பதில் சொல்கிறார்.. அது உண்மையோ என்றெண்ணி பக்கத்துக்கு மருத்துவரை அணுக முயன்ற போது,உதவியாளர் சொன்ன பதில்.. படிச்சவங்க தானே நீங்க? மேடம் சொல்றது புரியலையா ரூ 50 கொடுங்க..கையெழுத்து போட்டு கொடுத்துடுவாங்க..எந்த டாக்டர் அ நீங்க பார்த்தாலும் பணம் கொடுக்காம நடக்காது சார்..எந்த காலத்துல இருக்கீங்க நீங்கன்னு.. எவ்வளவு செலவு பண்ணி படிச்சிருக்கோம்..சும்மா கையெழுத்து போட்டு தரனுமான்னு மருத்துவர் கேட்க்கிறார். எவ்வளவோ முயற்சித்தும் நேரம் போனதே தவிர கையெழுத்து பெற இயலவில்லை..பணம் கொடுத்தால் ஒரிஜினல் சான்றிதழ் களை பாராமலே கையெழுத்து போட்டு கொடுக்க தயாராய் இருக்கிறார்கள்..பணம் கொடுக்க இயலாது என்றால் ஒரிஜினல் சான்றிதழ் இருந்தாலும் வேலைக்காகாது என்கிற நிலை.. எல்லா அதிகாரிகளும் இப்படி நடந்துகொள்வதில்லை..பெரும்பான்மையானவர்கள் இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள்.. அப்போ ரூ 50 கொடுக்க இயலாத ஏழை மாணவனின் நிலை..??? ரூ 50 கூட கொடுக்க இயலாதவன் ஏன் படிக்க வேண்டும்.காசில்லாம வேணும்னா நீங்க படிச்ச பள்ளி,காலேஜ் ல போய் வாங்கிக்கோங்க.. பொறுப்பிலுள்ள அரசு அதிகாரிகளின் பதில் இதுதான்.