Posts tagged ‘இயக்கம்’
ஏ இந்தியாவே..ஈவு இரக்கமற்ற காவு தேசமே!
ஏ இந்தியாவே
ஈவு இரக்கமற்ற காவு தேசமே
எப்படி சொல்ல சொல்கிறாய்
எம்மை இந்தியன் என்று!
முத்துகுமரனை தொடர்ந்து
கனன்ற உணர்வை
நெஞ்சிலேயே பூட்டி
எம்மினத்திற்கு ஏதும்
செய்ய இயலாது ஏமாந்து
எரிந்து இறந்தான்
ஏனைய எம் தமிழன்.
நீ அது கண்டு
நிறைந்து சிரித்தாய்!
அப்பாவித் தமிழனை
சிறையிலே அடைத்து வைத்து
உன் அகங்காரப் பசிக்கு
ஆணவப் போக்குக்கு
மீண்டும் கேட்கிறாய்
தூக்கு வடிவில் காவு
ஆனால் அடிக்கடி சொல்கிறாய்
இது அகிம்சை வளர்த்த
காந்தி தேசம்!
அப்பாவி உயிர்களை
எப்போதும் காக்க
வேட்கை கொண்ட
என் தமக்கை செங்கொடி
உயிரில் தீயூட்டி
எழுச்சிக்கு உயிரூட்டி
செந்நீர் சிந்தி வீழ்ந்துவிட்டாள்
இரக்கமில்லா இம்மண்ணில்..
அப்படியாவது
இந்தியாவின் நெஞ்சு
இளகுமா என்று!
ஏ இந்தியாவே
ஈவு இரக்கமற்ற காவு தேசமே
இன்னும் எத்தனைப்பேரை
காவு கொள்ள காத்திருக்கிறாய்
எம்மினத்தில்!
சொல்ல நா கூசுகிறது
சொல்லொண்ணா துயர் கூடுகிறது
எப்படி சொல்ல சொல்கிறாய்
எம்மை
இன்னும் இந்தியன் என்று!
அலைபேசி மனிதாபிமானம்!
- உயிர் போராட்டத்தில்
வாகன நெரிசலில்
அலைபேசி உரையாடலினூடே
அலறுகிறது
ஆம்புலன்சின் அலாரம்.
- ச்சே… இந்த டார்ச்சர்
தாங்கல..ஒழுங்கா
பேசக்கூட முடியல..
பேசிமுடிக்கிறது
அலைபேசி மனிதாபிமானம்.
ஆரண்ய காண்டம் – புதிய அனுபவம்!
அமைதியாக ஆரம்பிக்கிறது படம் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல்..ஆரம்பக்காட்சியே கிழவன் ஜாக்கி செராப் இளம் மனைவியுடன் வலுக்கட்டாயமாக கிளுகிளுப்பில் ஈடுபடுகிறார்..உடலுறவில் தன் இயலாமையை வெளிப்படுத்த முடியாமல் இளம்மனைவியை அடித்து ஆக்ரோசம் காட்டுகிறார்..அடுத்து வெளியே வந்து அங்கு பேசிக்கொண்டிருக்கும் கும்பலிடம் சத்தம் போட்டு உள்ளே செல்லும் போது அந்த கிழவனின் பின்புலம் நமக்கு புரிய வருகிறது.அவர் குழுத் தலைவன்,தாதா என்பது.இன்னொரு தாதா கஜேந்திரன் குழுவுக்கு வந்த போதை பொருளை, ஜாக்கி செராப் குழு ,இடை தரகரிடம் இடைமறித்து வாங்க முயற்சிக்கும் போது,ஜாக்கியின் அடியாள் சம்பத்துக்கு வருகிறது கண்டம்,சம்பத் செய்த காரியத்தால் சம்பத் மனைவிக்கு வருகிறது கண்டம்,போதை பொருள் பறிபோகிறது.அது ஒரு அப்பா, மகனிடம் சிக்கி ,அந்த அப்பா தாதா கும்பலிடம் சிக்க,அங்கே அவனுக்கு வருகிறது கண்டம்,ரவிக்ரிஷ்ணாவை தாதா கிழவனின் இளம் மனைவி காதலிக்க அதனால் அவனுக்கு வருகிது கண்டம் ,இப்படி பல்வேறு நிழலுலக மனிதர்களின் கண்டங்களை சுமந்து அடுத்தடுத்த பரிணாமத்தில் பயணிக்கிறது இந்த காண்டம்.
எல்லா கேரக்டர்களும் நன்றாக செய்திருக்கிறார்கள்.கேமராவே கதாநாயகன்,காட்சி கலரிலிருந்து ,கேமரா கோணம் வரை ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு அழகு..ரசித்து என்பதை விட ருசித்து அனுபவித்து வேலை செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.இசை படத்தின் இன்னொரு சிறப்பம்சம்.இயக்குனரின் புதிய பாணியிலான முயற்சி பாராட்டுக்குரியது.போஸ்டர் முதல் படம் வரை அனைத்துலும் வித்தியாசம் காட்ட முயற்சித்திருக்கிறார்.என்றைக்கோ பார்த்த ட்ரைலரும்,அந்த போஸ்டருமே என்னை படம் பார்க்க தூண்டிய முதல் காரணி.பாடல் இல்லாத இன்னொரு சினிமா.சில இடங்களில் வசனங்கள் நச்..எந்த ஆம்பளையும் சப்ப கிடையாது..எல்லா ஆம்பளையுமே சப்பதான் என்று எதிர்பாராத நேரத்தில் கதாநாயகி பேசுவது..படத்தில் வரும் சிறுவன் பல இடங்களில் பேசும் வசனங்கள் நம்மை ரசிக்க வைக்கின்றன..
ஆனால் சில இடங்களில் வசனம் இழுவை..ரொம்ப மொக்க போடாதீங்க என சொல்ல வைக்கிறது..அப்புறம் கெட்ட வார்த்தைகள்..நிலைநிற்கும் கேமெரா கோணம் சில இடங்களில் ரசிக்கவும் ,பல இடங்களில் அலுப்படையவும் வைக்கிறது..கதைக்களம் இங்கே சென்னையில் நடப்பதாக காட்டினாலும்,சென்னை வாசம் காட்சியில் இருப்பதாக உணர இயலவில்லை.மண்ணோடு ஒட்டவில்லை.நிலைநிற்கும் கேமெரா கோணம்,நீண்ட வசனங்கள் சில காட்சிகளில் வைப்பதை தவிர்த்திருந்தால் காட்சியின் வேகம் கூடியிருக்கும்.படம் பார்க்கலாம்..ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும்..
எல்லைகள் போடப்பட்ட போதும்!
முகநூளில் முகம் தெரியாதவளோடு!
அப்படி ஓர் எதிர்முனை தாக்குதலை நான் எதிர் பார்த்திருக்கவில்லை அவளிடத்தில்.
காலையில் என் அலைபேசியை அடைந்த ஆரம்ப குறுஞ்செய்தி அழகாய் என்னை வாழ்த்துவதாயும்,என் இன்முக புன் சிரிப்பை எதிர் நோக்கி அனுப்பியதாயும் தான் எனக்குப் பட்டது.வரிசையாய் வந்திருந்த ஏழு செய்திகளையும் ஒன்றன் பின் ஒன்றாக பின்தொடர எனக்கு பின்மண்டையில் அடிப்பது போல் பேரிடியாய் வார்த்தை சீற்றம் குறுஞ்செய்தி வடிவில்.புன் சிரிப்பு மாறி புண்ணானது நெஞ்சம்.வார்த்தையில் சுட்டெரிக் கிறாள்.வலிமிகுந்த நெஞ்சில் எழுத்தீட்டியால் குத்தி எம்மை பிளக்கிறாள்.என்னை தாக்கிய வார்த்தைகள் எமக்கு வலிக்காது என அறிந்தவள் தம்மையே தாக்கி குறுஞ்செய்தியில் குமுறுகிறாள்.வேகம் கொண்ட வெறியில் எம் அன்பை அறிமுகம் செய்த,கொஞ்சம் கொஞ்சமாய் எங்கள் நேசம் சேமித்து, நூறு சதவிகிதம், எங்கள் காதலை அடைகாத்து வைத்த அந்த வலைப்பகுதியில்,அவள் பக்கத்தை அகற்றுகிறாள்.அப்படியோர் அழுகையை அவளிடத்தில் அதற்கு முன் யாம் அறிந்ததில்லை.
பாசத்தின் வெளிப்பாடு கண்ணீராய் கசிகிறது.நெஞ்சம் வலிக்க நான் கூனிக் குறுகிப் போகிறேன் குற்ற உணர்வில்.அவள் அனுப்பிய வார்த்தைகளில்,அதிலுள்ள காதலின் ஆழத்தில்,அவள் அன்பின் ஆர்ப்பரிப்பில்!
மன்னிப்பாயா பாடலை திரும்ப திரும்ப கேட்டுப் பார்க்கிறேன்.
இன்னோர் இடத்திலிருந்தும் என்னையே நெஞ்சில் சுமந்து கிடக்கிறாளே..என்னை ஒவ்வொரு படியிலும் தூக்கி விட முனைகிறாளே!என் வளர்ச்சிக்காய் ஏதேதோ செய்கிறாளே!அப்படி பட்டவளை மறந்துவிட்டு..
ஆமாம் என்ன செய்து விட்டேன் நான்.
அவளுக்கு தெரியாமல் இன்னோர் புறாவுக்கு தூது விட்டுக் கொண்டிருந்தேன் சிக்குகிறதா என்று!முகநூளில் முகம் தெரியாதவளோடு ,மொக்கைப் போட்டுக் கொண்டு..நீங்களே சொல்லுங்கள்….
அவள் என்னை என்ன செய்திருக்க வேண்டும்?