Posts tagged ‘உயிர்’
போலி மனிதாபிமானம்!
- போகும் வழியில்
விபத்தின் பிடியில்
புறங்காட்டி விழுந்து
உயிர் ஊசலாடுகிற
ஒருவனைக் கண்டேன்.
- “ஐயோ பாவம்”
என்று
ஒற்றை வார்த்தை
உதிர்த்துவிட்டு
போலி மனிதாபிமானம்
காட்டி
புறப்பட்டு செல்கிறது
என் உதவ முன்வராத
மனது!
காதல் நாடகம்!
- முதல் காதல் வந்தபோது
முழுவதுமாய் அவள்!
என்னில்,என்னுயிரில்
தூக்கம் தொலைந்த இரவில்
பசிக்காத பொழுதுகளில்
எனது எழுத்துகளில்
ஹார்மோன்களின் பரப்புகளில்
இதயத்தில் இடுக்குகளில்
நான் பார்க்கும் இடமெல்லாம்
நீக்கமற நிறைந்தவளாய்!
காலத்தின் சூழல்
கடந்துபோனது
அனுபவத்தின் முதல் காதல்!
- இரண்டாம்,மூன்றாம் காதலாய்
முட்டி மோதின
ஏனைய காதல்கள்!
ஒருத்தியிடம் சொன்ன பொய்யை
ஒவ்வொருத்தியிடமும்
சொல்லி வைத்தேன்!
உன்னை மட்டும்தான்
காதலிக்கிறேன் என!
ஒவ்வொருத்தியும்
நம்பிக்கொண்டிருக்கிறாள்
தன்னை மட்டும்தான்
காதலிக்கிறான் என!
நாடகமாகிக் கொண்டிருக்கிறது
அனுபவத்திற்கு
பின்னாலான காதல்கள்!
முள்ளிவாய்க்காலுடன் முடியாது!
இதுபோன்றொரு
நாளில்தான்
எம் சொந்தங்கள்
சோறின்றி பட்டினியாய்
உறக்கமின்றி ஊர் ஊராய்
உறவுகளை இழந்து
உரிமைகளை துறந்து
ஓய்வின்றி உழன்று
கால்கடுக்க நடந்து
கன்னி வெடிகளில் சிக்கி
பதுங்குகுழிகளில் புதைந்து
உறுப்புகள் ஆங்காங்கே
சிதறி விழுந்திட
இருக்கின்ற உயிரையாவது
எடுத்துக் கொண்டு
போவோமென
ஓடோடி வந்தனர்
இந்த உலகத்திடம்
உயிர் பிச்சை கேட்டுக்கொண்டு!
அவர்கள்
வரும் வழியெங்கும்
பிணங்களின் குவியல்.
துறந்த உயிர்களின்
துர்நாற்றம்.
முலை அறுத்து
கொல்லப்பட்ட பெண்.
இல்லாத மார்பில் பால் குடிக்க
எத்தனிக்கும் குழந்தை.
பிறப்புறுப்பில் துப்பாக்கி
துளையிட்டு
தொலைந்த பெண்போராளி.
சுமந்து பெற்ற பிள்ளை
முன்னே
ராணுவ ராட்சசன்களை
சுமந்த அம்மா.
அம்மா முன்னே
அம்மனமாக்கப்பட்ட
மகன்.
தந்தை பார்க்க
கற்பழிக்கப்பட்ட
மகள்.
உயிருடன் பிடித்து
கண்களை கட்டி
சுட்டுக் கொல்லப்பட்ட
இளைஞர்கள்.
எவ்வளவோ கத்தியும்
கேட்கவில்லை
இவ்வுலகின்
செவிட்டு செவிப்பறைகளுக்கு
எம்மினத்தின் குரல்.
எங்கேனும் பார்த்திருக்குமோ
இவ்வுலகம்
இப்படியோர் அவலம்.
முள்ளி வாய்க்காலில் முடிந்துவிட்டது
எம் வரலாறென
மூச்சு விடுகிறாயா
சிங்களனே ..
பொறுத்திரு..
உன் சிரம் கொய்யும்
காலம்
சீக்கிரம் வரப்போகிறது!
கண்டம் போய் கண்டம் வந்தது!
- வெட்டி வீழ்த்தப்பட்ட
ஆட்டின் தலையில்
ஒட்டி துடிக்கிறது
உயிரின் சொச்சம்!
- உங்க உயிருக்கு
கண்டம் உள்ளது..
குலதெய்வம் கோவிலுக்கு
போங்க-
சாமியாடி சொன்னதில்
கண்டம் வந்தது
ஆட்டுக்கெடாவுக்கு!
அன்னையர் தினம்…
கணவனை சுமந்து
கரு சுமந்தாய்!
கணவனை விடவும்
கருமேல் காதல் சுமந்தாய்!
வாந்தியெடுத்து,வலிதாங்கி
கரு வளர்த்தாய்!
கருவை உருவாக்கி
பிரசவித்தாய்!
பாசம்காட்டி,பாலூட்டி
வளர்த்தெடுத்தாய்!
மழலைக் குறும்பை மனமகிழ்ந்து
பார்த்து ரசித்தாய்!
அப்பா அடிக்கின்ற தருணம்
அதைத்தடுத்து காவல் நின்றாய்!
உனக்கென கனவின்றி
பிள்ளைகளுக்காய் கனவு கண்டாய்!
பிள்ளை மனம் பூரிக்க
திருமணம் செய்து வைத்து மன மகிழ்ந்தாய்!
இன்று பேரக்குழந்தை உன் மடியில்
தாயே..
உலகம் என்றுமே உன் காலடியில்!