Posts tagged ‘கண்ணீர்’

தண்ணீர்…கண்ணீர்!

பணக்கார பங்களாவில்

அழகுக்காய்

கொட்டுகிறது தண்ணீர்!

அருகாமை குடிசைகளில்

தண்ணீர் வேண்டி

அரசுக்கு மனுபோட்டு

இயலாமையில் மக்கள் கண்ணீர்!

 

செப்ரெம்பர் 7, 2011 at 10:48 முப பின்னூட்டமொன்றை இடுக

இருந்தும் இனிக்கிறது ஏனோ !

ஆறிருக்கு,ஆறுக்கான சுவடிருக்கு

ஆற்றிலே நீரில்லை!

காற்றிருக்கு,காற்றிலே

அதிகமாய் கார்பன் கலந்திருக்கு!

மரமிருக்கு,பச்சையின்றி காய்ந்துபோன

கிளைகள் மட்டும்!

பணம் கொடுத்தே வாங்க வேண்டியிருக்கிறது

அங்கேயும் தண்ணீரை!

விவசாய நிலமிருக்கு

வீட்டுமனைகள் அதிகமாய் விளைந்திருக்கு!

மனிதனிருக்கிறான்,மறத்துப்போன

மனங்களோடு அங்கேயும்!

இப்போதெல்லாம் கிராமத்துக்கும்

நகரத்துக்கும் பெரிய வித்யாசமில்லை!

இருந்தும் இனிக்கிறது

ஏனோ

அது எம் சொந்தஊர்!

ஓகஸ்ட் 18, 2011 at 12:22 பிப 3 பின்னூட்டங்கள்

மெரினாவில் திரண்ட மக்கள் எழுச்சி!
அம்மா என்றழைத்த குழந்தை,ஐயோ என்று சரிகிறது அடுத்த நொடி மண்ணில்.அம்மாவுக்கு முன் நிர்வாணமாய் மானபங்கப் படுத்தப்பட்ட மகன்.அப்பாவுக்கு முன்னால் கற்பழிக்கப்பட்ட மகள்.இறந்தப்பின்னும் துகிலுரியப்பட்ட நம் சகோதரிகள்.மார்பகங்களைத் திருகி இது என்ன குண்டா என கொச்சைப் படுத்தப் பட்ட கொடூரங்கள்.பிறப்புறுப்பில் தோட்டா செலுத்தி துளைக்கப்பட்ட அநீதிகள்.தாயின் மார்பத்தில் பால் குடித்தவாறே மரணித்துப் போனக் குழந்தை.கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்கள்.. இத்தனை கொடூரங்களும் நமக்கு அருகாமையில் இலங்கையில் நம்மவர்களுக்கு..

நம் நிலை இங்கே செய்திகளிலும்,செவிகளிலும் கேட்டு கேட்டு,கேட்க நாதியற்றவர்களாய் நம்மினத்தை விட்டு விட்டு,கைகள் கட்டப் பட்டு,வாய்கள் பூட்டப்பட்டு இயலாமையில் குமுறிக் கொண்டு,இருந்தோம் இத்தனை நாளாய்..எதிர்த்து போரிடத்தான் நம்மால் இயலவில்லை.அழுவதற்கு கூடவா நம்மிடத்தில் கண்ணீர் இல்லை..நம் அழு குரலையாவது இந்த அகிலம் அறியட்டும்.அதற்காக தமிழுணர்வு இயக்கங்கள் ஒன்றிணைந்து ,இறந்த ஒன்றரை லட்சம் தமிழர்களுக்காய் மெழுகுதிரி ஏந்தி அஞ்சலி செலுத்தும் வகையில் நினைவேந்தல் ஒன்றை மெரீனா கடற்கரையில்,கண்ணகி சிலை பின்புறம் ஜூன் 26 அன்று மாலை 5 மணியளவில் ஏற்பாடு செய்திருந்தார்கள்..

மெரினா செல்ல ஆயத்தமாகும் போதே வானம் கொஞ்சம் கண்ணீரை இறந்த தமிழனுக்காய் சிந்திவிட்டு,தன் ஆற்றாமையைஅடக்கிக் கொண்டு ஆகாயத்தில் குமுறிக்கொண்டிருந்தது ,நம்மைப்போலவே.

அது தமிழர்களுக்கு,தமிழனின் உணர்வுக்கு விடுக்கப் பட்ட சவாலாக கூட எடுத்துக் கொள்ளலாம்.மழை வருகிறதே என்று தமிழன் வீட்டில் அடங்கி,முடங்கி விடுகிறானா..?இல்லை உண்மை உணர்வுடன், மழை வந்து என்னை நனைத்தாலும் பரவாயில்லை.என் இன மக்களுக்கு நேர்ந்த கொடுமைகளுக்கு குரல் கொடுக்க வருவேன் என மெரினாவில் நிறைகிறானா?என மழை கொண்ட கோட்பாடாகவும் இருக்கலாம்.

ஆனால் மெரீனா சென்றபோது,கடற்கரையில் கடலைவிடவும் பெருந்திரளான உணர்வுக் கூட்டம்,குடும்பங்கள்,குழந்தைகள்,தாய்மார்கள்,தலைவர்கள் என மணற்பரப்பு முழுக்க மனித தலைகள்..உணர்ச்சி மிக்க உணர்வு கோசங்கள்,பனைமர நிழலாய் மணல் சிற்பம்,நாடகங்கள்,வலி சுமந்த ஓவியங்கள்,நினைவுசின்ன அமைப்பு வடிவைமைப்பு ,கண்ணீர் சிந்தி பூ தூவியவர்கள் என உணர்வுகளின் ஒருமித்த கூட்டம் அது ..,இருக்கும் தமிழனை காப்பாற்ற ,இனமானத்தின் ஒருங்கிணைந்த குரல் அது!

அங்கே செல்லும் வரை நான் எதிர்ப் பார்த்திருக்கவில்லை..இவ்வளவு கூட்டம் இருக்குமென்று..இனப்பாசம் இன்னும் செத்து விடவில்லை..தமிழ்மானம் எவரிடத்திலும் மடிந்து விடவில்லை..ஒவ்வொருவருக்குள்ளும் கொழுந்து விட்டு எரிகிறது என்பதை மெரினாவில்,மெழுவர்த்தி வெளிச்சத்தில் கண்டேன்..தமிழீழ விடியலுக்கான வெளிச்சம் அங்கே நிறைய பரவி இருந்தது!

இறந்த தமிழனுக்காய் மெழுகுவர்த்தி நம்மோடு சேர்ந்து தன் கண்ணீரை சிந்தி முடிக்க,அதுவரை ஆற்றாமையை அடக்கிகொண்டிருந்த மேகமும் தன் பங்குக்கு கண்ணீரை தாரை தாரையாக ஊற்றி முடித்தது!

ஜூன் 27, 2011 at 11:48 முப 6 பின்னூட்டங்கள்

முகநூளில் முகம் தெரியாதவளோடு!

நேற்று..

அப்படி ஓர் எதிர்முனை தாக்குதலை நான் எதிர் பார்த்திருக்கவில்லை அவளிடத்தில்.

காலையில் என் அலைபேசியை அடைந்த ஆரம்ப குறுஞ்செய்தி அழகாய் என்னை வாழ்த்துவதாயும்,என் இன்முக புன் சிரிப்பை எதிர் நோக்கி அனுப்பியதாயும் தான் எனக்குப் பட்டது.வரிசையாய் வந்திருந்த ஏழு செய்திகளையும் ஒன்றன் பின் ஒன்றாக பின்தொடர எனக்கு பின்மண்டையில் அடிப்பது போல் பேரிடியாய் வார்த்தை சீற்றம் குறுஞ்செய்தி வடிவில்.புன் சிரிப்பு மாறி புண்ணானது நெஞ்சம்.வார்த்தையில் சுட்டெரிக் கிறாள்.வலிமிகுந்த நெஞ்சில் எழுத்தீட்டியால் குத்தி எம்மை பிளக்கிறாள்.என்னை தாக்கிய வார்த்தைகள் எமக்கு வலிக்காது என அறிந்தவள் தம்மையே தாக்கி குறுஞ்செய்தியில் குமுறுகிறாள்.வேகம் கொண்ட வெறியில் எம் அன்பை அறிமுகம் செய்த,கொஞ்சம் கொஞ்சமாய் எங்கள் நேசம் சேமித்து, நூறு சதவிகிதம், எங்கள் காதலை அடைகாத்து வைத்த  அந்த வலைப்பகுதியில்,அவள் பக்கத்தை அகற்றுகிறாள்.அப்படியோர் அழுகையை அவளிடத்தில் அதற்கு முன் யாம் அறிந்ததில்லை.

பாசத்தின் வெளிப்பாடு கண்ணீராய் கசிகிறது.நெஞ்சம் வலிக்க நான் கூனிக் குறுகிப் போகிறேன் குற்ற உணர்வில்.அவள் அனுப்பிய வார்த்தைகளில்,அதிலுள்ள காதலின் ஆழத்தில்,அவள் அன்பின் ஆர்ப்பரிப்பில்!

மன்னிப்பாயா பாடலை திரும்ப திரும்ப கேட்டுப் பார்க்கிறேன்.

இன்னோர் இடத்திலிருந்தும் என்னையே நெஞ்சில் சுமந்து கிடக்கிறாளே..என்னை ஒவ்வொரு படியிலும் தூக்கி விட முனைகிறாளே!என் வளர்ச்சிக்காய் ஏதேதோ செய்கிறாளே!அப்படி பட்டவளை மறந்துவிட்டு..

ஆமாம் என்ன செய்து விட்டேன் நான்.

அவளுக்கு தெரியாமல் இன்னோர் புறாவுக்கு தூது விட்டுக் கொண்டிருந்தேன் சிக்குகிறதா என்று!முகநூளில் முகம் தெரியாதவளோடு ,மொக்கைப் போட்டுக் கொண்டு..நீங்களே சொல்லுங்கள்….

அவள் என்னை என்ன செய்திருக்க வேண்டும்?

ஜனவரி 5, 2011 at 10:42 முப 12 பின்னூட்டங்கள்

மழை கண்ணீர்!

  • குடையற்ற தருணங்களில்

குதூகலமாய்

உன்னை ஆரத்தழுவி

அணைக்கிறது

மழைநீர்!

  • நீ குடை பிடிக்கையில்

கோபித்துக் கொட்டுகிறது

குடையில்

மழை கண்ணீர்!

திசெம்பர் 2, 2010 at 10:36 முப 12 பின்னூட்டங்கள்

Older Posts
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 200,084 hits

%d bloggers like this: