Posts tagged ‘கனவு’
நிலவும் ஆண்பால் தானடி!
கடற்கரை மணலில் காலாற
நடந்துவிட்டு
இருட்டான இடம்தேடி
இனிமை காண அமர்கையில்
நம் தனிமையை கெடுத்தபடி
வெளிச்சமங்கு வருகிறது
விழித்துப் பார்க்கிறேன்
பொறாமை கொண்ட
நிலவு உன்னை
வெறித்துப் பார்த்து நிற்கிறது.
உன்னை கண்கொட்டாது கண்ட
நிலவை கண்டேனடி!
நிலவும் ஆண்பால் தானடி!
புத்திர பாசம்!
- உன் பிஞ்சு விரல்
பற்றும் போதெல்லாம்
வற்றிப் போகிறது
இந்த உலகைப் பற்றிய
நினைவு!
- நீ மட்டுமே
என் உலகமாய்
நினைவு முழுக்க!
குழந்தை மனசு!
பலமணிநேரம்
தூங்கி முடித்தும்
அலாரத்தை
அணைத்து விட்டு
சில மணித்துளிகள்
தூங்கிக் கழிப்பதில்
பிரியப்படுகிறது
குழந்தை மனசு!
ஊர்ப்பாசம்!
- பிறந்த மண்ணில்
மழலையாய்
உருண்டு பிறண்டு
மண்ணை நக்கி
ருசித்தேனே!
- அந்த ருசிதான்
எம் ரத்தம் புகுந்து
உடலில் ஒட்டி
உறவாய் கலந்து
உயிரில் நிறைந்ததுவோ!
- பிறந்த ஊரின்
பெருமை பேசி
இருக்கும் ஊரை
மறந்தவனாய்
இருக்கின்றேன் எப்பொழுதும்!
- தொலைதூரப் பேருந்தின்
பெயர்ப்பலகை
கண்டால் கூட
வந்து சேருகிறது உறவு
நம்ம ஊரு வண்டியென்று!
- பிறந்த ஊரை
மிதித்து விட்டால்
நெஞ்சம் நிமிர்கிறது
செருக்கு கொண்டு
சொந்த ஊரென்று!
- வாழ்விக்கும் ஊரிலே
நல்வாழ்க்கை வாழும் போதும்
வறட்டு பிடிவாதமாய்
வந்து தொலைக்கிறது
சாகும் போது
சொந்த மண்ணில்தான்
சாக வேண்டுமென்று
ஊர்ப்பாசம்!
அன்னையர் தினம்…
கணவனை சுமந்து
கரு சுமந்தாய்!
கணவனை விடவும்
கருமேல் காதல் சுமந்தாய்!
வாந்தியெடுத்து,வலிதாங்கி
கரு வளர்த்தாய்!
கருவை உருவாக்கி
பிரசவித்தாய்!
பாசம்காட்டி,பாலூட்டி
வளர்த்தெடுத்தாய்!
மழலைக் குறும்பை மனமகிழ்ந்து
பார்த்து ரசித்தாய்!
அப்பா அடிக்கின்ற தருணம்
அதைத்தடுத்து காவல் நின்றாய்!
உனக்கென கனவின்றி
பிள்ளைகளுக்காய் கனவு கண்டாய்!
பிள்ளை மனம் பூரிக்க
திருமணம் செய்து வைத்து மன மகிழ்ந்தாய்!
இன்று பேரக்குழந்தை உன் மடியில்
தாயே..
உலகம் என்றுமே உன் காலடியில்!