Posts tagged ‘தாய்’
எச்சில் சோறு தின்றவள்!
எச்சில் சோற்றை
எங்கோ தின்றவள்
என்னை எச்சமாய்
ஈன்றெடுத்து
எச்சில் இலைகளோடு
எரிந்து விட்டுப்போகிறாள்
குப்பைத்தொட்டியில் கேட்கும்
குழந்தையின் குரல்!
தாய்மையை விட மேன்மை ஆண்மை!
வயிற்றில் கரு சுமந்தவளையோ
கையில் குழந்தை சுமந்தவளையோ
அடிக்கடி காண நேர்கிறது
எனது பேருந்து பயணங்களில்!
சுமையை சுமந்தபடி
கால் இடறி ஏறும் தாய்கள்
தவறி கூட நிற்பதில்லை
தாய்மார்கள் இருக்கை அருகில்!
அப்படியே நின்ற போதும்
மனம் இளகி எழுவதில்லை
மகராசிகள் எவரும்!
ஆணில் ஒருவன்தான்
அப்பொழுதும் எழுகின்றான்
தாயவளுக்கு இருக்கை தர!
தாய்களை விடவும்,தந்தைகளிடமே
நிரம்பி இருக்கிறது
அதிக பட்ச தாய்மை உணர்வு!
முதல் பிறந்தநாளில்!
நஞ்சு நிறையா நெஞ்சின்
பிஞ்சு விரல் பிடித்து
கொஞ்சுமொழியில்
குழந்தையோடு குலாவி
கொண்டாடுகிற
முதல் பிறந்தநாளில்
குழந்தையோடு குழந்தையானாள்
குழந்தையை பெற்றவளும்!
ஓராண்டு முன் பிரசவித்தபோது
தாயாய் இருந்தவள்!
இனி வரும் ஆண்டுகளிலும்
தாயாகவே இருப்பவள்!
அன்னையர் தினம்…
கணவனை சுமந்து
கரு சுமந்தாய்!
கணவனை விடவும்
கருமேல் காதல் சுமந்தாய்!
வாந்தியெடுத்து,வலிதாங்கி
கரு வளர்த்தாய்!
கருவை உருவாக்கி
பிரசவித்தாய்!
பாசம்காட்டி,பாலூட்டி
வளர்த்தெடுத்தாய்!
மழலைக் குறும்பை மனமகிழ்ந்து
பார்த்து ரசித்தாய்!
அப்பா அடிக்கின்ற தருணம்
அதைத்தடுத்து காவல் நின்றாய்!
உனக்கென கனவின்றி
பிள்ளைகளுக்காய் கனவு கண்டாய்!
பிள்ளை மனம் பூரிக்க
திருமணம் செய்து வைத்து மன மகிழ்ந்தாய்!
இன்று பேரக்குழந்தை உன் மடியில்
தாயே..
உலகம் என்றுமே உன் காலடியில்!
கொலையும் செய்வாள் தாய்!
- தம் உயிரைக்
கொடுத்தேனும்
பருந்திடம் இருந்து
தம் குஞ்சுகளை
காப்பாற்ற
பதறித் துடிக்கிறது
தாய்க்கோழி!
- கோழிக் குஞ்சின்
உயிர் பறித்து
பசியால் வாடும்
தம் குஞ்சுகளுக்கு
பசியாற்ற
பாய்ந்து தாக்குகிறது
பருந்து!