Posts tagged ‘நிகழ்ச்சி’
500 வது பதிவு – வினைத்தொகை!
வேடிக்கையாகத்தான் எழுத ஆரம்பித்திருந்தேன்..பின்னர் அதுவே ஒரு வாடிக்கை ஆகிவிடும் என்பதறியாமல்!
சிறுவயதில் தம் மகற்கு ,சேமிப்பு பழக்கத்தை கற்று தருவதற்காக ,பெற்றோர்கள் வாங்கித்தரும் உண்டியலைப் போல்தான், என் தமையன் உருவாக்கி தந்தது இந்த வலைத்தளமும்..நீதான் கிறுக்குவியே..அதை இங்கே கிறுக்குடா ..உனக்குன்னு ஒரு பக்கம் இருக்கட்டும்,அதில் உமது எழுத்துகள் சேமிப்பாகட்டும் என்று சொல்லி…
உண்டியலில் ஒவ்வொரு நாளும் பத்து பைசா,ஐம்பது பைசா,ஒரு ரூபாய் என கையில் கிடைத்ததை கொண்டு ரொப்பி,பார்த்து பார்த்து சேமித்து,குலுக்கி பார்த்து மனமகிழ்ந்து,அதன் கனத்தினை கையில் நிறுத்திப் பார்த்து..ஆஹா..நிரம்பிக்கொண்டிருக்கிறது..என பெருமகிழ்வு கொண்டு,பின்னொருநாளில் ,உண்டியல் நிரம்பி இருக்கிறது ..உடைத்துப் பார்ப்போமென,உடைத்து எண்ணிலடங்கா சில்லறைகளை எண்ணிடும் வேளையில் ..நாமா சேர்த்தோம் இவ்வளவு பணத்தை.. என்று மனதில் வருமே ஓர் மட்டற்ற மகிழ்ச்சி.. அதே மகிழ்ச்சிதான் இன்று எம்மை ஆட்க்கொண்டிருக்கிறது..
ஒவ்வொருநாளும் ஒவ்வொன்றாய் கிறுக்கி..நாமா எழுதிவிட்டோம் 500 பதிவுகள் எனுமளுவுக்கு என்னை பிரமிக்க செய்கிறது ..பேரானந்தம் சூழ்கிறது.
நானும்,எழுதுகிறேன் என்பதில் தொடங்கி ,நல்லாத்தான் எழுதுறீங்க..தொடருங்க..என சொல்லிடும் பின்னூடங்களில் மனதை பறிகொடுத்து,வாழ்த்துக்கள் நண்பரே..வளர்க என அன்பர்கள் சொல்லிட கேட்டு,இன்னும் கொஞ்சம் இப்படி இருந்தா நல்லா இருக்கும் என எமை செதுக்கும் சிற்பிகளின் ஆலோசனை பெற்று,இது ரொம்ப மொக்கை என நிராகரிப்போரின் கருத்துகள் ஏற்று,கிறுக்கும் ஆர்வம் என்னில் ஓர் கிறக்கத்தை ஏற்ப்படுத்தி விட்டது.
கிறுக்கிகொண்டிருக்கிறேன்,கிறுக்கினேன்,கிறுக்கி கொண்டே இருப்பேன் எனுமளவுக்கு அன்பர்களின் ஆதரவு என்னை ஆழமாக்கி விட்டது.எழுதும் ஆர்வத்தை அதிகமாக்கி விட்டது.
அன்பர்கள் ஒவ்வொருவரின் பெயராக குறிப்பட்டு எழுதவேண்டுமென்று ஆசை கொண்டேன்…நேரமின்மையால் எழுத இயலவில்லை..இருந்தாலும்..எனக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன்..இந்நன்நாளில்!
—————————————————————————————————————————————
சுயபுராணம் போதும் …எதாவது விஷயம் இருக்கா? என்போருக்காக..
நான் 500 வது பதிவெழுதும் சமயத்தில் ,திரைப்படங்களுக்கான தேசிய விருதும் அறிவிக்கப் பட்டுள்ளது!அதில் எப்போதும் இல்லாத அளவுக்கு, தமிழ் சினிமா அதிக அளவில், தேசிய விருதுகளை வாங்கிக் குவித்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது!ஒரு தமிழனாய் கர்வப்பட வைத்திருக்கிறது!விருது வென்ற அனைவர்க்கும் எனது வாழ்த்துகள்!
விருது பெற்றவர்கள் விவரம்:
சிறந்த படம் : ஆதாமின்டே மகன் அபு (மலையாளம்)
சிறந்த நடிகர் : தனுஷ் (ஆடுகளம்), சலீம் குமார் (ஆதாமின்டே மகன் அபு)
சிறந்த இயக்குனர் : வெற்றிமாறன் (ஆடுகளம்)
சிறந்த திரைக்கதை : வெற்றிமாறன் (ஆடுகளம்)
சிறந்த நடன அமைப்பு : தினேஷ் (ஒத்த சொல்லால… ஆடுகளம்).
சிறந்த எடிட்டிங் : கிஷோர் (ஆடுகளம்)
சிவராம் காரந்த் விருது : ஆடுகளம்
சிறந்த பொழுதுபோக்கு படம் : தபங் (இந்தி)
சமூக பிரச்னை பற்றிய படம் : சாம்பியன்ஸ்(மராட்டி).
ஒளிப்பதிவு : மது அம்பாட் (ஆதாமின்டே மகன் அபு).
சிறந்த நடிகை : சரண்யா பொன்வண்ணன் (தென்மேற்கு பருவக்காற்று), மித்தாலி (பபு பஞ்ச் பாச்சா, மராட்டி).
சிறந்த குணசித்திர நடிகர் : தம்பி ராமய்யா (மைனா).
சிறந்த பாடலாசிரியர் : வைரமுத்து (கள்ளிக்காட்டில் பொறந்த தாயே, தென்மேற்கு பருவக்காற்று).
துணை நடிகை : சுகுமாரி (நம்ம கிராமம்).
தயாரிப்பு வடிவமைப்பு : சாபுசிரில் (எந்திரன்)
ஸ்பெஷல் எபெக்ட்ஸ் : ஸ்ரீனிவாஸ் மோகன் (எந்திரன்).
சிறந்த குழந்தைகள் படம் : ஹெச்சேகாலு (கன்னடம்).
இசைஅமைப்பாளர் : விஷால் பரத்வாஜ் (இஷ்க்யா), ஐசக் தாமஸ் (ஆதாமின்டே மகன் அபு).
ஜூரி விருது : வ.ஐ.ச. ஜெயபாலன் (ஆடுகளம்).
காலப்பெட்டகத்தில் கனவுகளாய் செல்லாக் காசுகள்..
நண்பர் சொல்கிறார் இன்னொரு நண்பரிடம்..உங்க பையனுக்கு உண்டியல் சேமிப்பு பழக்கம் கற்று தந்திருக்கிறீர்களா?ஆம் என்பதாய் அவர் பதில்..அப்படியாயின் உண்டியலை உடைத்து 25 பைசாவை செலவழிக்கப் பாருங்கள்.25 பைசா ,ஜூன் 30 க்கு பின், செல்லாக் காசாக அரசால் அறிவிக்கப் பட்டிருக்கிறது.இதுதான் நண்பர் அந்த நண்பருக்களித்த அறிவுரை.அதைத் தொடர்ந்துதான் அந்தக் கால காசுகளைப் பற்றிய நினைவு அலசல்கள் பரபரப்பாய் பற்றிக் கொண்டது நண்பர்களிடம்..
ஒரு நண்பர் சொல்கிறார்..5 பைசாவுக்கு அக்காலத்தில் மிட்டாய் வாங்கினேன்..அப்பா பள்ளிக்கு செல்லும் போது பத்து பைசாவை என்னிடம் கொடுத்து நீயும்,தம்பியும் மிட்டாய் வாங்கி சாப்பிடுங்கள் என்பார்!அது ஒரு கனாக்காலம்…என்கிறார் பெருமூச்சோடு!
அடுத்தவர் ஆரம்பிக்கிறார்…அது பத்து பைசாவைப் பற்றிய நினைவு..நினைவிருக்கிறதா உங்களுக்கு ,சரியான வட்டமாக அல்லாமல் பூவின் இதழ் போன்ற வட்டத்தில் அக்கால பத்து பைசா..ரயில் தண்டவாளத்தில் நசுங்க வைத்து ரசித்திருக்கிறேன்.பைசாக்களை பால்பேப்பர் நோட்டில் வைத்து பென்சிலால் தேய்த்து அதன் அச்சு எடுத்திருக்கிறீர்களா..அதெல்லாம் அக்கால விளையாட்டு.மோதிரம் செய்த கதையும் உண்டு என்கிறது அவரின் நினைவலைகள்.
அடுத்தவர் வார்த்தையில் 20 பைசா நிழலாடுகிறது..20 பைசா பற்றி அவர் நினைவு படுத்துகையில் பலரின் நினைவுகளில் அதன் அமைப்பு மறந்து போயிருக்கிறது…அவர் இருபது பைசாவில் சேமியா ஐஸ் வாங்கிய சுவையான நினைவுகளை அசை போடுகிறார்.பைசாவில் h ,m , t தனி தனி காயின்களை ஒன்று சேர்த்து கொடுத்தால் hmt வாட்ச் தருவார்கள் என்று யாரோ கதை கட்டிகளின் கதைகளை ,அக்காலத்தில் நம்பி இருப்பதாகவும் வெம்பி சொல்கிறார்.பைசா வைத்து பைசா கோபுரம் கட்டிய கதையும் இடையில் வந்து போகிறது..
இப்படியாய் நீள்கிறது காணாமல் போன பழைய 50 பைசா,1 ரூபாய் நோட்டு,பளபள சின்ன பத்து பைசா நினைவுகள்,அதனை சுற்றிய கதைகள்..நான் குழந்தையாக இருந்தபோது,என் தாத்தா 1 பைசா,2 பைசா,1 /2 அனா நினைவுகளைப் பற்றி சிலாகித்ததும் என் நினைவிலிருந்து மறையாமல் இன்னும் நிழலாடுகிறது.ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நாட்டின் வளர்ச்சிக்கேற்ப,நாணயங்களின் மதிப்பிற்கேற்ப அவை மாறவே,மறையைவோ செய்கின்றன.அது காலத்தின் கட்டாயம்..இருந்தாலும்…அந்த பழைய பைசாக்களை பார்க்கும் போது அது நம்மில் உண்டாக்கும் சிலிர்ப்பு மாறுவதில்லை.அக்கால காசுகள் இக்காலத்தில் செல்லாக் காசாகலாம்..ஆனால் அதனைப் பற்றிய நினைவுகள் நம்மிடத்தில் எப்போதும் செல்லாமல் போவதில்லை!!இனிமையான நினைவுகளை சேமித்துக் கொண்டே இருக்கின்றன!